போலி மனித உரிமை அமைப்புகள் நடத்திய 17 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் போலி மனித உரிமை அமைப்புகள் நடத்திய 17 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங் களில் மனித உரிமை என்ற பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகப் பலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய கணபதி சுப்பிரமணியன் உட்பட 17 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.என்.பிரகாஷ் நேற்று பிறப்பித்த உத்தரவு:

முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் மனித உரிமை என்கிற பெயரில் அரசு சாரா அமைப்புகளை நடத்தி வருகின்றனர். மனித உரிமை என்கிற வார்த்தையை தனி நபர்கள் பயன்படுத்தக் கூடாது என தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மனித உரிமைகள் என்கிற பெயரில் பல்வேறு அமைப்புகள் உள்ளன.

நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக இந்த அமைப்புகள் காட்டிக் கொள்கின்றன. மேலும், பொது விஷயங்களில் மூக்கை நுழைத்து பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றனர். தங்களை கேள்வி கேட்பதற்கு அச்சம்கொள்ளும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

எல்லா மக்களையும் சில காலம் ஏமாற்றலாம். சிலரை எல்லா காலமும் ஏமாற்ற முடியும். எல்லாரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பது பழமொழி. இந்தச் சூழலில்தான் இவர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். இந்த அமைப்பினர் இந்தியாவில் மனித உரிமை இல்லை என்கிற தோற்றத்தை வெளி நாட்டில் ஏற்படுத்தியுள்ளனர். போலி விசாரணை செய்து கட்டப் பஞ்சாயத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் கொடி, முத்திரைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற அமைப்புகளை நடத்துபவர்கள் பலர் வழக்கறிஞர்கள். அவர்களுக்கு மனித உரிமை என்கிற பெயரில் அமைப்பு நடத்துவது விதிமீறல் என்பது தெரியும். சிலர் தங்கள் அமைப்பை சர்வதேச அமைப்பு, ஐநா அங்கீகாரம் பெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நபர்கள் நீதிபதிகள், வி.ஐ.பி.க்களுடன் புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்தை பயன்படுத்தி மிரட்டியுள்ளனர். இது கடுமையான குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE