வடசென்னையில் இயங்கி வந்த பி அண்டு சி மில் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் நிலம் வழங்க வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் பட்டாளம் பகுதியில் சுமார் 254 ஏக்கர் பரப்பளவில் 1876-ம் அண்டு பி அண்டு சி மில் (பக்கிங்ஹாம் அண்டு கர்நாடிக் மில்) ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் ஆரம்பத்தில் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
உயர்நிலைப் பள்ளி
மில் வளாகத்திலேயே 32 ஏக்கர் பரப்பளவில் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளும் கட்டித்தரப்பட் டன. ராணுவத்திற்கான துணிகள் அனைத்தும் இந்த மில்லில் இருந்து உற்பத்தி செய்து அனுப்பப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
மின்சார உற்பத்தி
இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரம் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டது. தொழிற்சாலை உபயோகத்துக்குப் போக மீத மிருந்த மின்சாரத்தை அரசுக்கும், தனியாருக்கும் நிர்வாகம் விற்பனை செய்தது.
மத்திய அரசிடம் ஒப்படைப்பு
நன்றாக செயல்பட்டு வந்த பி அண்டு சி மில்லை, 1969-ம் ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு ஆங்கிலேயர்கள் சென்றுவிட்டனர். மத்திய அரசும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மில்லை நடத்தி வந்தது. அதன் பிறகு மில்லை தொடர்ந்து நடத்த முடியாததால் மத்திய அரசு தனியாருக்கு மில்லை கொடுத்துவிட்டது.
மில் மூடப்பட்டது
பல்வேறு கைகள் மாறி இறுதியாக உடையார் நிர்வாகம் கையில் மில் வந்தது. தொடர்ந்து நடத்த முடியாததால், 1996-ம் ஆண்டு மில் நிரந்தரமாக மூடப்பட்டது. மில்லில் பணியாற்றிய 4,500 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
தொழிலாளர்கள் போராட்டம்
ஆனால், நிர்வாகத்துக்கு ஆதரவான தொழிலாளர்களுக்கு மட்டும் இழப்பீட்டுடன், குடியிருக்க இடமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மற்ற தொழிலாளர்கள் தங்களுக்கும் இடம் வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மில்லை திறந்த அதிமுக அரசு
இது தொடர்பாக சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.நடராஜன் கூறியதாவது:
பி அண்டு சி ஆலையை நடத்துவதற்கு தண்ணீர் இல்லை. அதனால், மில்லை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக 1990-ல் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் பல்வேறு காரணங்களைக் கூறி 1991-ம் ஆண்டு ஆலை மூடப்பட் டது. அப்போது ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ஆலையை மீண்டும் திறந்தது. ஆனால் 1996-ம் ஆண்டு மில் நிரந்தரமாக மூடப்பட்டது.
அப்போது கடைசியாக அங்கு வேலை செய்த 4,500 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 244 பேருக்கு 500 சதுர அடி நிலம் மற்றும் 100 பேருக்கு 600 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது. மில்லில் வேலை செய்த பயிற்சி தொழிலாளர்கள், அங்குள்ள கோயில் பூசாரி போன்றவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆலையில் கஷ்டப்பட்டு தலைமுறை தலைமுறையாக உழைத்தவர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை.
இதனால், எங்களுக்கும் நிலம் வழங்க வேண்டும் அல்லது நிலத்தின் மதிப்பிற்கு பணம் வழங்க வேண்டும் என்று கோரி 2,300 தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் இருந்த பி அண்டு சி மில் 1996-ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய 900 பேருக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு மற்றும் 500 சதுர அடி நிலத்தை அந்த அரசு வழங்கியுள்ளது. அதே போல, இந்த மில்லில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும் இடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10 மாடி கட்டிடம்
பி அண்டு சி மில் 254 ஏக்கர் பரப் பளவு கொண்டது. இந்த வளாகத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் 4 இடத்தில் தொழிலாளர்களுக்காக 1,200 வீடுகள் கட்டப்பட்டன. வீடுகளுக்கு ஆரம்பத்தில் மாதம் ரூ.7 வாடகையாக வசூலிக்கப்பட் டது. அதன்பின், ரூ.14ம், ஆலையை மூடுவதற்கு முன்பு கடைசியாக ரூ.50ம் வசூலிக்கப்பட்டது. மில்லை மூடிய பிறகு குடியிருப்புகள் இடிக் கப்பட்டுள்ளன. இந்த ஆலை வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 99 கிரவுண்ட் நிலம் உள்ளது. மேலும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் சட்டத்துக்கு புறம்பாக உடையார் நிர்வாகம் 10 மாடி கட்டிடத்தை கட்டி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 1-ம் தேதி தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் நுழைந்தனர். தொழிற்சாலை நுழைவு வாயில் கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து, சுமார் 2,300 பேர் தொழிற்சாலைக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் வயதானவர்கள் தங்குவதற்கு வசதியாக 44 குடிசைகளையும் தொழிற்சாலை வளாகத்துக்கு உள்ளேயே போட்டு, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு, இரவிலும் அங்கேயே தங்கி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து புளியந்தோப்பு துணை ஆணையர் சுதாகர் தலைமையில் வந்த போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கினர். தொழிற்சாலை நிர்வாகிகளையும், தொழிலாளர்களில் சிலரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தனர்.
இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தேர்தல் நடைபெற இருப்பதால் தொழிலாளர்கள் பிரச்சினை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த நேரத்தில் போராடினால் அரசியல்வாதிகளால் ஏதாவது தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர். அதனால்தான் 5 ஆண்டுகளாக சாதாரணமாக போராட்டம் நடத்தியவர்கள், இப்போது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago