மார்ச் 28 முழு அடைப்பு: 20 லட்சம் வணிகர்கள் பங்கேற்பர்

காவிரியின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் வரும் 28-ம் தேதி நடக்கவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் 20 லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று நிருபர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது:

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்னும் இடத்திலும், ராசிமணல் என்னும் இடத்திலும் 3 தடுப்பணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் உபரி நீரையும் தேக்கி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே 7 அணைகளையும், 3 ஆயிரம் ஏரிகளையும் உருவாக்கி தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை நீடித்தால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்படும். கர்நாடகத்தின் முயற்சியை தடுக்கவும், இதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் வரும் 28-ம் தேதி முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் பங்கேற்கும். அன்றைய தினம் டெல்டா பகுதிகளில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் வணிகர்கள் கடைகளை அடைப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE