காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது: மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

காவிரியின் குறுக்கே அணைகட்ட முடிவு செய்துள்ள கர்நாடக அரசுக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு உரிய தண்ணீர் கிடைக்கும். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் போன்ற இடங்களில் இரண்டு புதிய அணைகளைக் கட்டுவதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்ல. டெல்டா விவசாயிகளுக்கு விரோதமானது. மேலும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பணைக் கட்டுவதற்காக, நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதோடு, அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. மேலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும். காவேரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என்பதை மாநில அரசும் மத்திய அரசின் மூலம் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE