வினாத்தாள் வெளியான விவகாரம்: போலீஸ் விசாரணை முடிந்து 4 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு; 9-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக கைதான 4 ஆசிரியர் களையும் போலீஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓசூரில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின் போது, வினாத்தாளை ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வாட்ஸ் அப் மூலம் சக ஆசிரியர்களான உதயக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து 4 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகன்தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது உள்ளிட்ட 5 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே கைதான 4 ஆசிரியர்களையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணை முடிந்து ஓசூர் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நேற்று 4 ஆசிரியர்களையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் 9-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்பு 4 ஆசிரியர்களும் ஓசூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணை முடிந்து ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆசிரியர்களை அழைத்து வந்த போலீஸார்.

‘முக்கிய தகவல் கிடைத்தது’

விசாரணை குறித்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்திலிடம் கேட்டபோது, 4 ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த விவரங் கள் அழிக்கப்பட்டுள்ளது. செல்போன்களை சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி, அதன் அறிக்கை வந்து பின்பு தான் ஆசிரியர்கள் கூறிய தகவல்கள் சரியாக உள்ளதா என முடிவு செய்ய முடியும். மேலும் வினாத்தாள் வாட்ஸ் அப் மூலம் எத்தனை பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்கிற விவரங்கள் தெரிய வரும், என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE