விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை சட்டப்பேரவை புறக்கணிப்பு: திமுக, பாமக, மார்க்சிஸ்ட், மமக அறிவிப்பு

விவசாயிகள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளைய சட்டப்பேரவைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.

காவிரியின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கர்நாடகத்தை கண்டித்தும், மத்திய அரசு இதை தடுக்க வேண்டும் என்று கோரியும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நாளைய சட்டப்பேரவை கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “காவேரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு விவசாய சங்கங்களின் ஏற்பாட்டில் தமிழகத்தில் 28-ம் தேதி (நாளை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில் திமுக உறுப்பினர்கள் சனிக்கிழமை சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பார்கள்” என்றார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் சனிக்கிழமை நடைபெறும் பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE