கோபி அருகே அனுமதியின்றி கல் வெட்டிய குவாரி உரிமையாளருக்கு ரூ.4.75 கோடி அபராதம்

கோபி அருகே அனுமதியின்றி கல் வெட்டிய குவாரி உரிமையாளருக்கு ரூ.4.75 கோடி அபராதம் விதித்து சார்-ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கோபி சார்-ஆட்சியர் கிருஷ்ணன் உன்னிக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் உன்னி தலைமையில் வருவாய்துறை மற்றும் புவியியல், சுரங்கத்துறை அதிகாரிகள் கல் குவாரிகளில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வில் கவுண்டம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி கல் குவாரிகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதியில் உரிமம் பெற்று கல்குவாரி நடத்திவரும் குப்புராஜ் என்பவர் அனுமதி பெற்ற இடத்தின் எல்லையைத் தாண்டி அருகில் உள்ள அனுமதி பெறாத இடத்தில் 51 ஆயிரத்து 300 கன மீட்டர் அளவுக்கு கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. அனுமதியின்றி வெட்டப்பட்ட கல்லின் அளவை கணக்கிட்டு குப்புராஜுக்கு ரூ.4.75 கோடி அபராதம் விதித்து சார்-ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து சார் ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி கூறியதாவது:

கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிப்புத்தூர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்புராஜ் அனுமதி பெறாத பகுதியில் இருந்து கற்களை வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் விற்பனை செய்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE