தேர்தல்களில் பணபலம்தான் சவாலாக உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் சம்பத் பேச்சு

சமீபகாலமாக தேர்தல்களில் ஆள்பலத்தின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், பண பலம் பெரும் சவாலாக உள்ளது என்று முன்னாள் மத்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறினார்.

‘இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஆடிட்டர்ஸ் ஆப் இந்தியா’ அமைப்பு சார்பில் ‘நல்லாட்சி மற்றும் தேர்தல் நிர்வாகம்’ குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் பேசியதாவது:

நாட்டில் மொத்தம் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒரு மக்களவைத் தேர்தலை நடத்த 50 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்திடம் 350 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசு ஊழியர்களைக் கொண்டே இத்தேவையை பூர்த்தி செய்கிறோம்.

மாநில காவல்துறைதான் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தன. அதன் மீது நம்பிக்கை இழந்த சில கட்சிகள், உச்ச நீதிமன்றம் சென்று துணை ராணுவப் பாதுகாப்பை பெற்றன. சமீபத்தில் மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில்கூட துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சமீபகாலமாக, தேர்தல்களில் ஆள் பலத்தின் தாக்கம் குறைந்துள்ளது. ஆனால் பண பலம் பெரும் சவாலாக இருக்கிறது. இதை தடுக்க ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இணையம் வழியாக பொதுமக்கள் வாக்களிப்பது தொடர்பான கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது. அந்த நடைமுறையின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அதை அமல்படுத்துவது குறித்து ஆணையம் யோசிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏசியன் காலேஜ் ஆப் ஜெர்னலிசம் தலைவர் சசிகுமார், பப்ளிக் ஆடிட்டர்ஸ் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் கே.ஆர்.பாலிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE