புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: பட்ஜெட்டில் ஓபிஎஸ் பெருமிதம்

2015-2016 ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மின்சாரத் துறைக்கு மொத்த நிதியுதவியாக 13,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு 7,136 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

2015-16-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மின்சாரம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

2011 ஆம் ஆண்டு மே மாதம், ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, மாநிலத்தின் மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருந்த காரணத்தால், தமிழகத்தில் மின்சார விநியோகம் மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்காக இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் அப்போதைய மின் தேவை 235 மில்லியன் யூனிட்டுகளாகவும், தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 33 சதவீதமாகவும் இருந்தது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றாம் நிலை அலகு, வட சென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் நிலை அலகு, தமிழ்நாடு மின்சார வாரியமும் தேசிய அனல் மின் உற்பத்திக் கழகமும் இணைந்து வல்லூரில் அமைத்துள்ள உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகள் போன்ற திட்டங்களின் பணிகளை முடித்து மின் உற்பத்தியைத் தொடங்கியும், இடைக்கால, நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், 4,991 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரத்தைப் பெற்று, முந்தைய அரசால் தீர்வு காணப்படாமல் விட்டுச் செல்லப்பட்ட மின் பற்றாக்குறைச் சூழலை திட்டமிட்ட முறையில் இந்த அரசு சீர்செய்து வருகிறது.

தற்போது மின்சாரப் பயன்பாட்டிற்கான தேவை கணிசமானஅளவு உயர்ந்துள்ளபோதிலும், மின் தேவைக்கும் மின் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, 24.6.2014 அன்று இதுவரை அதிகபட்ச உச்ச மின் தேவை அளவான 13,775 மெகாவாட் மின் தேவையையும் நமது மாநிலம் நிறைவுசெய்துள்ளது .

தமிழகத்தின் எதிர்கால மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய, தொலைநோக்குப் பார்வையோடு எண்ணூர் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கம் (1 ஒ 660 மெகாவாட்), எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம் (2 ஒ 660 மெகாவாட்) போன்ற மின் உற்பத்தித் திட்டங்களை இந்த அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்கள் மட்டுமன்றி எண்ணூர் மின் உற்பத்தி நிலைய மாற்றுத் திட்டம் (1 ஒ 660 மெகாவாட்), வடசென்னை மின் உற்பத்தி திட்டம் நிலை ஐஐஐ (1 ஒ 800 மெகாவாட்) ஆகியவற்றிற்கான தொடக்க நிலைப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும், உப்பூர் அனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

புதிய மின் திட்டங்களையும், மின் சுமையில் உள்ள மாற்றங்களையும் கருத்தில் கொண்டு மின் கடவு மற்றும் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பெருமளவில் கொண்டு செல்வதற்காக, 6,000 கோடி ரூபாய் செலவில் நமது மாநிலத்தில் அதிக திறன் கொண்ட மின்கடவுப் பாதை இணைப்பை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் எடுத்து வருகிறது.

இந்த மின்கடவுப் பாதைக் கட்டமைப்பின் ஒரு பகுதிக்கு 1,593 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி தேசிய தூய்மை சக்தி நிதியத்திலிருந்து 40 சதவீதம் மானியமாகவும், கே.எப்.டபிள்யூ ஜெர்மன் வங்கியிலிருந்து 40 சதவீதம் கடனாகவும், எஞ்சிய 20 சதவீதம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தால் பங்கு மூலதன நிதியாகவும் அளிக்கப்படும்.

3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தித் திறனை அமைப்பதற்காக புதுமையான சூரிய ஒளி மின்சாரக் கொள்கையை ஜெயலலிதா 2012 ஆம் ஆண்டு வெளியிட்டார். ஜெயலலிதா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு இதுவரை 115 மெகாவாட் சூரிய மின்சக்தித் திறன், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் முன்னுரிமை மின்கட்டணமாக யூனிட்டுக்கு 7.01 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 5,366 மெகாவாட் அமைக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 156 மெகாவாட் அமைக்க பதின்மூன்று நிறுவனங்களுடன் மின்சாரம்வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட, இந்த அரசு தொடர்ந்து முனைப்புடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த முன்முயற்சிகளின் பலனாக, சூரிய ஒளி சக்தி உள்ளிட்டபுதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் நம்மாநிலம் செய்துள்ள சாதனைகளைப் பாராட்டி பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, 1,015.13 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக நமது மாநிலம் பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நிதிச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 2013-2014 ம் ஆண்டில் தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகம் வெளியிட்ட 6,353 கோடி ரூபாய்க்கான கடன் பத்திரங்களை இந்த அரசே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தது. இக்கடன் பத்திரங்களில் 1,000 கோடி ரூபாயை இந்த அரசு ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, அதை இந்த நிதியாண்டில் திருப்பிச் செலுத்தியுள்ளது. 2015-2016 ஆம்ஆண்டில் மேலும் 2,000 கோடி ரூபாய் அளவிலான கடன் பொறுப்புகள் இந்த அரசால் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாநிலத்தின் மின்சார மானியச் செலவு தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் நிதிச் சுமை அதிகரித்து வந்தாலும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. 2014-2015 ஆம் ஆண்டில் மானியம், பங்கு மூலதன உதவி, பண இழப்பிற்கான நிதியுதவி, கடனைத்திருப்பிச் செலுத்துதல் மற்றும் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் ஆகியவற்றிற்காக மொத்தம் 11,748 கோடி ரூபாயை தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகத்திற்கு இந்த அரசு நிதியுதவியாக வழங்கியுள்ளது.

2015-2016 ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு 7,136 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மானம் மற்றும் உற்பத்திக் கழகத்திற்கு வழங்கப்படும் பங்கு மூலதன உதவிக்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2015-2016 ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மின்சாரத் துறைக்கு மொத்த நிதியுதவியாக 13,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE