வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி: சிறப்பு பார்வையாளராக 10 ஐஏஎஸ்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி ஆகிய விவரங்களை சேர்ப்பதுடன் சிறு தவறுகூட இல்லாத வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் புதிய திட்டம் கடந்த 3-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று தொடங்கியுள்ளனர். வீட்டுக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இப்பணி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடையும்.

இதையடுத்து, ஏப்ரல் 12, 26, மே 10, 24 (ஞாயிற்றுக்கிழமைகள்) ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் கலந்துகொண்டும் ஆதார், செல்போன் எண், இமெயில் விவரங்களை வாக்காளர்கள் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். அதுசம்பந்தமாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலவரத்தை தமிழக தேர்தல் துறை இணையதளத்தில் (www.elections.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளுக்காக பொது சேவை மையங்களும் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் சென்னை மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்கிவைக்கப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களாக 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

கிர்லோஷ்குமார் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்), டி.கார்த்திகேயன் (விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்), ஹர்சகாய் மீனா (தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்), சி.சமயமூர்த்தி (அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர்), அனில் மேஷ்ராம் (நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்), எம்.ஏ.சித்திக் (நாமக்கல், கரூர், திண்டுக்கல்), கே.பாலச்சந்திரன் (கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு), டி.என்.வெங்கடேஷ் (மதுரை, தேனி, விருதுநகர்), டாக்டர் கே.மணிவாசன் (ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை), ஏ.கார்த்திக் (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி).

இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE