மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சென்னை - வண்டலூர் பொதுக் கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பேசினார்.
தனது உரையை தமிழில் பேசி, 'தமிழ்த் தாய்க்கு வணக்கம்' தெரிவித்து துவக்கினார். வண்டலூர் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் கூட்டத்தை வைத்தே மக்களவைத் தேர்தல் முடிவுகளை தெரிவித்து விடலாம் என்றார். கூட்டத்தில அவர் மேலும் பேசியது:
"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. மத்தியில் வலுவான ஆட்சி அமைய வேண்டும்.
இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்களும், பாகிஸ்தான் சிறைகளில் குஜராத் மீனவர்களும் அடைபட்டிருப்பதற்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம்.
சிபிஐ மீது சாடல்...
சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால்கூட சிபிஐ-யை தவறாக பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை. மத்திய அரசின் தீர்ப்பையும்கூட மதிப்பதில்லை.
உணவு தானிய கிடங்கில் எலிகளுக்கும், பூச்சிகளுக்கும் இரையாகும் தானியங்களை ஏழை மக்களுக்கு மானிய விலையில் வழங்கலாம் என்ற அறிவுரையையும்கூட அரசு புறக்கணித்து விட்டது. இதேபோல் நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மதிக்கவில்லை.
மத்திய அரசுக்கு கேள்வி...
சுதந்திரம் கிடைத்ததில் மத்திய அரசு நாட்டின் ஏழை மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. அப்படி ஏதாவது செய்திருந்தால் அவர்கள் சொல்லட்டும். தேர்தல் வரும் போது மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஏழை எளிய மக்கள் குறித்த ஞாபகம் வருகிறது.
காங்கிரஸ் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கவர்னர் அலுவலகங்கள் காங்கிரஸ் அலுவலகங்களாக இருக்கிறது.
இது மட்டுமல்ல வருமான வரி அலுவலகங்களையும் மத்திய அரசு தவறாக பயன்படுத்தப்படுகிறது. குஜராத்தில் தொழிலதிபர்கள் முதலீடு செய்வதை முடக்கும் வகையில், வருமான வரி அலுவலர்கள் அடிக்கடி ரெய்டு நடத்துகின்றனர். இதன் மூலம் குஜராத் வளர்ச்சியை முடக்குவதே மத்திய அரசின் நோக்கமாகும்.
காங்கிரஸ் கட்சியை குஜராத் மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். அதனாலேயே பல ஆண்டுகளாக குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சியை கால் பதிக்க விடாமல் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஏமாற்றுக்காரர்கள் யார் என்பது தெரியும்.
நாட்டின் பொருளாதார நிலையை சீர்குலைத்து விட்டது காங்கிரஸ். தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மத்திய அரசு நாட்டை கடனாளியாக ஆக்கி வைத்திருக்கிறது. நேருவால் உருவாக்கப்பட்ட திட்டக்குழுவின் மரியாதையும் சீர்குலைக்கப்பட்டுவிட்டது.
பணக்காரர்களுக்கு மட்டும் தானா..?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பணக்காரர்களுக்கு மட்டும்தான் செயல்படுகிறது. பணக்காரர்கள் தங்களுக்கு தேவைகளை பூர்த்திசெய்து கொள்வார்கள். ஆனால் ஏழை மக்கள் கல்வி, மருத்துவம் போன்ற தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அரசையே நம்பி இருக்கிறது. அவர்களுக்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது.
மதச்சார்பின்மை பற்றி பேசும் காங்கிரஸ் கட்சிதான் ராணுவத்தில் கூட மத ரீதியிலான கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. பாஜகவின் தாரக மந்திரம் வளர்ச்சி என்பதே. பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு ஒட்டுமொத்தமாக வளர்ச்சி காணும்" என்றார் நரேந்திர மோடி.