தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு கோஷ்டி பூசல்கள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் மீண்டும் தமாகாவை தொடங்கிய நிலையில், பல தலைவர்கள் வாசனுடன் சென்றதால், காங்கிரஸில் இனி கோஷ்டி பூசல் இருக்காது என்று கூறப்பட்டது. இதனை உறுதி செய்வது போல கட்சிக் கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் ஒரே அணியாக திரண்டனர்.
ஆனால் இந்த ஒற்றுமை ஒரே மாதத்தில் காணாமல் போனது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காமராஜர் குறித்து கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துகள் அனலை கிளப்பின. கார்த்தி சிதம்பரத்தின் கருத்துகளை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக எதிர்த்தார்.
இந்த சூழலில் கார்த்தி சிதம்பரம் ‘ஜி 67’ என்னும் அமைப்பை தொடங்கி தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி யதற்கு விளக்கம் கேட்டு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு பதில் அனுப்பாத கார்த்தி சிதம்பரம், ‘என்னை கேள்வி கேட்கும் அதிகாரம், அகில இந்திய தலைமைக்கே உண்டு’ என்று கூறினார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். இதுபற்றி கருத்து கூறிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “இன்னொருவரும் தனது வாரிசுடன் கட்சியை விட்டு வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும்” என்று கூறினார். இது ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் குறிப்பதாக இருந்தது. இதனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார். ‘எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும்’ என்று ப.சிதம்பரம் வலியுறுத்தினார். ஆனால் அவற்றை இளங்கோவன் கண்டு கொள்ளவில்லை. உறுப்பினர் சேர்க்கையை இன்னும் ஆரம்பிக்கவில்லை, பொருளாளர் பதவியும் நிரப்பப்படவில்லை.
தேர்தலுக்கு கொஞ்ச காலமே இருக்கும் போது கட்சி அமைப்பை பலப்படுத்தாமல் தலைவர்களை விமர்சித்து வருகிறார். ப.சிதம்பரம் குறித்து அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து கூறியுள்ளார். இது சோனியா காந்திக்கு தெரிய வந்ததும் அவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்தார். இதற்கு நன்றி கூறி போஸ்டர் ஒட்டியுள்ளோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, “சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்காக டெல்லி வந்துள்ளேன். இதைப் புரிந்துகொள்ளாத சிலர் என்னை தலைமை கண்டித்ததாகவும், சம்மன் அனுப்பியதாகவும் வதந்தி கிளப்பி வருகின்றனர்” என்றார்.
தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் ஓயும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது மேலும் தீவிரமடைந்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago