நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி அரசியலுக்கு அப்பாற்பட்டது: திமுக மாநாட்டில் க.அன்பழகன் பேச்சு
திருச்சியில் சனிக்கிழமை தொடங்கிய திமுக 10-வது மாநில மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரை:
1943-ம் ஆண்டிலிருந்து திராவிடர் கழகம் தொடங்கி 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன். இதுவரையில் இதுபோன்ற மாநாட்டை வாழ்நாளில் பார்க்கவில்லை.
இளைஞர்களுக்கு அந்த உணர்வு வேண்டும். நாம் அரசியல் கட்சி மட்டுமல்ல. வரவுள்ள மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40-ம் நமக்கு என்பது அரசியல் வெற்றிக்காக மட்டுமல்ல. இந்த இனத்தைக் காப்பாற்றவும்தான்.
கருணாநிதியின் எழுத்துகள் அனைத்தும் அண்ணா வழியில் நம் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துகிறது. திருக்குறள், தொல் காப்பியம் தந்தது தமிழ் மொழி. தமிழ்மொழிக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. தமிழ் மொழியை நாம் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை என்பதை உணர வேண்டும்.
உலகத்தவர்கள் பாராட்டத்தக்கதாக இருந்தது தமிழினம். நம் கலாச்சாரம் சிறப்பானது. அதை சிலர் திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறார்கள். பெரியார் இல்லையெனில் நம் இனம் இந்த முன்னேற்றத்தைக் கூட அடைந்திருக்காது.
அண்ணாவை, கருணாநிதியை சுயமரியாதையின் பால் பெரியாரது கொள்கைகள் தான் ஈர்த்தன. அண்ணாவின் எழுத்துகள், கருணாநிதியின் மடல்களைப் படிக்க வேண்டும். அறிவால் தான் உயர முடியும் என்பதை உணர வேண்டும். தமிழனாக வாழ்வோம், தமிழனாக உயர்வோம்" என்றார் அன்பழகன்.