மெரினா நீச்சல் குளத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம்

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஆசியாவின் மிகப் பெரிய நீச்சல் குளமான மெரினா கடற்கரை நீச்சல் குளத்தை தனியார் வசம் ஒப்படைப் பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் ஏழை மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்படும் என்று நீச்சல் குளத்தின் வாடிக்கையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரையிலுள்ள நீச்சல் குளம் கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 100 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நீச்சல் குளம் ஆசியாவின் மிகப் பெரிய நீச்சல் குளம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய நீச்சல் குளமாகும். இந்த நீச்சல் குளம் மூன்றரை முதல் ஐந்து அடி வரை ஆழம் கொண்டது.

இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்த பொதுமக்களிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருக்கும் தனியார் நீச்சல் குளங்களில் இதனை விட பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் பேரும் இதர மாதங்களில் சராசரியாக ஆயிரம் பேரும் இங்கு வருகின்றனர்.

இதுதவிர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் நீச்சலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இங்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காசிமேடு, வியாசர்பாடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று மாநில அளவிலும் தேசிய அளவிலும் நூற்றுக்கணக்கான பதக்கங்களை பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கும் இங்கு இலவசமாக நீச்சல் கற்றுத் தரப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ரூ.500 கட்டணத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி, மெரினா நீச்சல் குளத்தை மூன்று ஆண்டுகளுக்கு பராமரித்தல், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பொறுப்புகளை தனியாருக்கு வழங்க ஒப்பந்தம் கோரியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி களிடம் பேசியபோது, “நீச்சல் குளம் நடத்திய முன் அனுபவம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீச்சல் குளத்தை பராமரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதிக்குள் ஒப்பந்ததாரர்கள் தகுந்த ஆவணங்களை வழங்க கோரியிருக்கிறோம். நீச்சல் குளத்தை மேலும் நவீனமாக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்றனர்.

நீச்சல் குளத்தின் வழக்கமான வாடிக்கையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர்கள் கூறும்போது, “தமிழகத்திலேயே மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நீச்சல் குளம் மெரினா நீச்சல் குளம் மட்டுமே. இது தனியார் நிறுவனங்கள் சிலவற்றுக்கு வணிக ரீதியாக ஆசையை தூண்டி யுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதிக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காகத்தான் நவீனப்படுத்துகிறோம் என்கிற பெயரில் நீச்சல் குளத்தை தனியாருக்கு விட திட்டமிட்டுள்ளனர்.உண்மையில், இப்போதே நீச்சல் குளம் உலகத் தரத்தில்தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவே தனியார் வசம் சென்றால் பொதுமக்களிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். தவிர, எந்த ஒரு தனியார் நிறுவனமும் மாநகராட்சி பள்ளி களில் படிக்கும் சுமார் 1000 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க முன்வராது. ரூ.500 கட்டணத்தில் தனியாரால் நீச்சல் பயிற்சி முகாமை நடத்த முடியாது” என்றனர்.

மாநகராட்சி தரப்பில் இதுபற்றி கேட்டபோது, “இப்போதுதான் ஒப்பந்தங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான சேவை மற்றும் ஏழை மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சி பாதிக்கப்படாதபடி நிபந்தனைகள் விதிக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்