ரயில்வே பட்ஜெட் நாளை (பிப். 26) தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை காட்டிலும் பழைய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி கிடப்பில் இருக்கும் தமிழக ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக சென்னை - திருச்சி - மதுரை - நெல்லை -நாகர்கோவில் - கன்னியாகுமரி நகரங்களை இணைக்கும் ரயில் பாதையை மின்மயத்துடன் கூடிய இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் பெரும்பாலான மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.
ஏற்கெனவே செங்கல்பட்டு வரையில் 2 வழிப்பாதை இருக்கிறது. இத்திட்டத்தின் விரிவாக்கமாக செங்கல்பட்டு - விழுப்புரம் வரையில் இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை வழிப்பாதை அமைக்க ரூ.1300 கோடி திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அதில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து 69 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எஞ்சியுள்ள பணிகளை முடிக்க ரூ.700 கோடி ஒதுக்கினால்தான் முடியும். அப்படி ஒதுக்கினால் 2 ஆண்டுகளில் திட்டப்பணிகள் முடிவடையும். திண்டுக்கல் - மதுரைக்கு ஏற்கெனவே இரட்டை வழிப்பாதை இருக்கிறது. இறுதியாக மதுரை - கன்னியாகுமரி இரட்டை வழிப்பாதைக்கு 245 கி.மீ. சர்வே பணிகள் முடிக்கப்பட்டு ரூ.1916 கோடி என திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அகலப்பாதை திட்டங்கள்
செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை திட்டத்தில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 36 கி.மீ. பணிகளை முடிக்க நிதி ஒதுக்க வேண்டும். கேரள மாநிலத்துக்கு மக்கள் குறுகிய வழியில் விரைவாக செல்லும் வகையில் மதுரை - கொல்லம் வரையில் ரயில் தடம் அமைக்க வேண்டும். திண்டுக்கல் -பொள்ளாச்சி - கோயம்புத்தூர் வழியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் ரயில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிதி ஒதுக்க வேண்டும். திண்டுக்கல் - பொள்ளாச்சி -பாலக்காடு பணிகளுக்கு நிதி தேவைப்படுகிறது.
அறிவிப்போடு நிற்கும் திட்டங்கள்
வட தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை ரயில் திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திண்டிவனம் - வாலாஜா - நகரி ரயில்பாதை திட்டத்துக்கு திட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதை கிடப்பில் போடாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும். டெல்டா பகுதியில் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையேயான ரயில் திட்டப்பணிகளும் தொடங்காமல் உள்ளன.
புறநகர் மின்சார திட்டங்கள்
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் முன்னேற்றம் காண அறிவித்த திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும். திருவள்ளூர் - அரக்கோணம் வரையில் 4-வது புதிய வழிப்பாதை அமைக்கும் பணியை செயல்படுத்த ரூ.79 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், ரூ.25 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நிதி ஒதுக்கினால் சென்னை -அரக்கோணம் வரையிலான தனிப்பாதையில் அதிகளவில் மின்சார ரயில்களை இயக்க முடியும். மேலும், பேசின் பிரிட்ஜ் - சென்னை சென்ட்ரல் வரையில் 5 மற்றும் 6-வது வழித்தடங்கள் பணிகளை விரைந்து முடிக்க பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும். அப்போது, சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள் விரைவாக வந்து செல்ல முடியும் என்று மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
இது தொடர்பாக கேட்டபோது டிஆர்இயு செயல் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது:
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அன்றாட போக்குவரத்தில் ரயில்வே இன்றியமையாததாகிவிட்டது. தெற்கு ரயில்வேயில் கிடப்பில் உள்ள இரட்டை வழிப்பாதை திட்டங்கள், அகல ரயில்பாதை திட்டங்கள், புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை கடற்கரை - மாமல்லபுரம் வழியாக கடலூருக்கு ரூ.600 கோடியில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என கடந்த 2006-07 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு தற்போது ரூ.1,200 கோடியாக அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நிதியை ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். மேலும், புறநகர் மின்சார ரயில்களை அதிகரிக்க சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வரையில் தனிப் பாதையை அமைக்க வேண்டும். இதற்குரிய நிதியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய ரயில்வே திட்ட அறிவிப்புகளை காட்டிலும், ஏற்கெனவே கிடப்பில் உள்ள திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் உள்ள பழைய ரயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago