நீலகிரி தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் பாஜகவை சேர்ந்த குருமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, பாமக உள்பட கூட்டணிக் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மோடிதான் பிரதமர் என பிரச்சாரம் செய்தார். இதனால் கடந்த முறை தேமுதிக நீலகிரியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை பாஜக போட்டியிடுவது உறுதியானது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி குருமூர்த்தி வேட்புமனு தாக்கலின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணியினர் திரண்டு வந்து திமுக, அதிமுக.வுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கால் நீலகிரி தொகுதியை நாடே கண்காணித்துவரும் நிலையில், புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாஜக.வுக்கு அமோக ஆதரவு காணப்பட்டது. மோடி அலை வீசுவதாகவும், ஊழலுக்கு எதிரான போர் எனக் கூறிய அக்கட்சியினர் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளில் நீலகிரியை முதன்மையாக வைத்திருந்தனர்.
இதற்காக முன்னாள் ஆட்சியர் ராஜ்குமாரை களமிறக்க முயற்சி செய்தனர். அவர் அரசியலில் ஆர்வம் இல்லை என தெரிவித்ததால் குருமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த குருமூர்த்தி, பாஜக.வுக்கும் அதிமுக.வுக்கும் இடையேதான் போட்டி. திமுக மூன்றாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரம்
பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக மற்றும் பாமக.வினர் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி, சமவெளிப் பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த வேட்புமனு பரிசீலனையில் பாஜக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
குருமூர்த்தி, கடந்த 2009-ம் ஆண்டு பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு 18 ஆயிரம் வாக்குகள் பெற்றார். மேலும் 2011-ம் ஆண்டு குன்னூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து அனுபவம் உள்ள நிலையில், தற்போது ஏ மற்றும் பி படிவங்கள் சமர்ப்பிக்காததால் வேட்பு மனு தள்ளுபடி ஆகியுள்ளது.
ஏற்கெனவே மனு தாக்கல் செய்த அனுபவம் உள்ள நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கூட்டணிக் கட்சியான பாமகவினர் உதகை அக்ரஹாரம் பகுதியில் திறக்கப்பட்ட பாஜக தேர்தல் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, பூட்டு போட்டு, பாமக கொடியை கதவில் கட்டினர்.
பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பட்பயர் பத்மநாபன் கூறியது: பாஜக வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், பாஜக வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருமூர்த்தி முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடவில்லை. ஏற்கெனவே, அவர் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே, எந்தெந்த படிவங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். கட்சி அங்கீகார படிவம் கிடைக்கவில்லை என்று கூறுவதில் சூழ்ச்சி உள்ளது. இதனை நாங்கள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
பாஜக மேலிடம் உடனடியாக குருமூர்த்தியிடமும், மாவட்டப் பொறுப்பாளர்களிடமும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பாஜக நிர்வாகிகள் எங்கே?
வேட்பு மனு தள்ளுபடியான செய்தி காட்டுத்தீயாக பரவியதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பாஜக நிர்வாகிகளையும், வேட்பாளர் குருமூர்த்தியையும் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் நிர்வாகிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவர் களது தொலைபேசிகளும் அணைக்கப் பட்டிருந்தன.
சோகம் அடைந்த தொண்டர்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் உதகை நகரை விட்டு வீடுகளுக்குச் சென்றனர். பிரச்சாரத்துக்கான வாகனமும் அனாதையாக மார்க்கெட் பகுதியில் விடப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago