பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்: ஓர் எளிய வழிகாட்டுதல்

By சி.கண்ணன்

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. 'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களுக்குள் காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிடும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைப்படி டாமி புளூ மாத்திரையை உட்கொள்ள வேண்டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மாத்திரை, மருந்துகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்து சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனமே, தற்போது பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து மக்கள் அச்சம், பயம் மற்றும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது?

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும்போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன்பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் இரண்டு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்:

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், சளியில் ரத்தம், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் போன்றவைகள் பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்:

வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பிய உடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. கைகளை கழுவால் மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது.

காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். இவர்களிடம் கைக்குலுக்க வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் உப்பு கலண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.

வீட்டில் உள்ள பொருட்களை தினமும் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும். பேருந்து, ரயில்களில் பயணிப்பவர்கள் மற்றும் திரையரங்கம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசங்கங்களை (மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டும். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முறைகள்:

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இந்த கைக்குட்டை மற்றும் துணிகளை நன்றாக துவைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

கைகளை கழுவினால் 80% தடுக்கலாம்:

பன்றிக்காய்ச்சல் 80 சதவீதம் கைகளை சுத்தமாக கழுவதாததால் தான் பரவுகிறது. சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ 30 வினாடிகள் தேவைப்படும். முதலில் கைகளை தண்ணீரில் ஈரப்படுத்த வேண்டும். தாராளமாக கை முழுவதும் சோப்பு போட வேண்டும். கையோடு கை சேர்த்து தேய்த்துக் கழுவ வேண்டும். வலது கை விரல்களை இடது கை விரல் இடுக்குகளில் நுழைத்து மாறி மாறி தேய்க்க வேண்டும். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாக கோர்த்து தேய்க்க வேண்டும். கைகளின் விரல்களின் பின் பாகங்களை தேய்க்க வேண்டும். கட்டை விரலால் கைகளை தேய்க்க வேண்டும். முன்பக்கம் மற்றும் பின்பக்கம் விரல்களை மாறி மாறி தேய்க்க வேண்ண்டும். இறுதியாக தண்ணீரில் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

பொதுமக்கள் தொடர்புகொள்ள...

பன்றிக்காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையை (டிபிஎச்) 044-24350496, 044-24334811, 9444340496, 9361482899 மற்றும் மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்