கரும்பு விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரும்பு விவசாயமே அழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை வராமல் தடுக்க, கரும்பு விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழகத்திலுள்ள 40 சர்க்கரை ஆலைகளில் 3 லட்சம் விவசாயிகள் 8.6 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்துவருகிறார்கள். சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிலேயே 3ஆவது மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத நிலையில் துன்பத்தில் உழன்று வருகிறார்கள்.

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலை நிர்வாகத்திடமிருந்து ஏறத்தாழ 40 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ளது. பலமுறை வற்புறுத்தியும் ஆலை நிர்வாகம் செலுத்துவதற்கு முன்வரவில்லை. இதற்கு காரணம் சர்க்கரை விலை தமிழகத்தில் ஒரு கிலோ ரூ.34ஆக இருந்தாலும் வெளி மாநில சர்க்கரை ரூபாய் 24க்கு விற்கப்டுகிற நிலையில் நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என்று ஆலை நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் தேவையை விட சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் உள்ளது. மகாராஷ்ட்ரா, கர்நாடகத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.370 மானியமாக வழங்கி விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்துவற்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை ஆலை நிர்வாகமும் தர முன்வரவில்லை. மத்திய, மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு உதவி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு ரூ.60 கோடி கரும்பு விவசாயிகளுக்குசெலுத்துவதற்கு வழங்கியது. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை செவிமடுக்க தயாராக இல்லை.

உர விலை, விதை, வெட்டுக்கூலி உயர்வு, போக்குவரத்துச் செலவு உயர்வு, தொடர்ந்து வறட்சி, மின்வெட்டு காரணமாக ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கர், கரும்பு சாகுபடி செய்வதை தவிர்த்து வேறு பயிர்களுக்கு மாறி வந்துள்ளனர். இந்நிலை நீடித்தால் கரும்பு விவசாயமே அழிந்துவிடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக கரும்பு விவசாயிகள் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு மாநில அரசு உடனடியாக மத்திய அரசை அணுகி நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய முயற்சியை மகாராஷ்டிரா மாநிலம் மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித மதிப்புக் கூட்டுவரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளைபோர்க்கால அடிப்படையில் எடுத்து கரும்பு விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அத்தகைய முயற்சிகள் எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டால் கரும்பு விவசாயிகள் இடையே கொந்தளிப்பான நிலை ஏற்படும்.சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 2014ல் 15 டாலராக இருந்தது.

ஆனால், தற்போது 45 டாலராக குறைந்துள்ளது. ஏறத்தாழ 60 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. இந்த அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்க வேண்டும் அதற்கு மாறாக கலால் வரியை கூட்டி அரசு கஜானாவை நிரப்புவதற்கு நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மத்திய அரசு ரூ 40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாயை பெருக்கிக்கொண்டுள்ளது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டுவர இந்த குறுக்கு வழியை கையாளுகிறது.

கடந்த ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசு மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காக பெட்ரோலியம் பொருட்களுக்காக ரூபாய் 1லட்சத்து 76 ஆயிரம் மானியமாகக் கொடுத்துள்ளது. ஆனால், சர்வதேச சந்தை விலை வீழ்ச்சியின் பயனை சாதாரண மக்களுக்கு சென்றடைவதை தடுக்கிற வகையில் நடவடிக்கை எடுத்து வருவது மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கையே வெளிப்படுத்துகிறது'' என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்