டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர் பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரேகா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எம்சிஏ முடித்து, பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு, 2011, ஜூலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஐ.டி. அனலிஸ்ட்டாக பணியில் சேர்ந்தேன். பின்னர், உதவி ஆலோசகராக பதவி உயர்வு பெற்றேன். மாதம் ரூ. 79,500 ஊதியம் வாங்கும் நான், தற்போது கர்ப்பமாக உள்ளேன். இந்த நிலையில், 25 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்கவும், அதற்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் 55 ஆயிரம் பேரை புதிதாக வேலையில் நியமிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
பணியாளர்களின் கடின உழைப்பையும், அனுபவத்தையும் உதாசீனப்படுத்தி, லாப நோக்கத்துக்காக இந்த முடிவை எடுத்துள்ளனர். எனக்கு கடந்த மாதம் 22-ம் தேதி பணிநீக்க உத்தரவை அளித்தனர். வருகிற 21-ம் தேதி பணியில் இருந்து நான் விடுபட வேண்டும். எனது பணித் திறன் அடிப்படையில் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை.
தொழில் தகராறு சட்டப்படி, வேலையை விட்டு அனுப்புவதாக இருந்தால், கடைசியாக பணியில் சேர்ந்தவரை, அதாவது அனுபவம் குறைந்தவர்களைத்தான் அனுப்புவர். அனுபவமிக்கவர்களை வேலையை விட்டு அனுப்புவது சட்டப்படி செல்லாது. அதனடிப்படையில், என்னை பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம்.
எனவே, எனது பணிநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம். துரைசாமி, மனுதாரர் மனுவுக்கு தமிழக தொழிலாளர் நலத் துறை (சமரசம்) அதிகாரி, டிசிஎஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும், மனுதாரரின் பணிநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார்.