‘மாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான வழக்கில் நாவலாசிரியர் பெருமாள் முருகனையும் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ள தாவது:

எழுத்தாளர் பெருமாள் முருகன், 2010-ம் ஆண்டு ‘மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதினார். அதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத் தின் மாயை பற்றியும், குழந்தையில்லா தம்பதிகளின் வீணான முயற்சிகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், புத்தகத்தில் இடம்பெற் றுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு சாதி மற்றும் மதம் அடிப்படையிலான அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடந்த 12-ம் தேதி நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த சமரச கூட்டத்தில், அந்த நாவலை திரும்பப் பெறும்படி பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து சம்மதிக்க வைத்துள்ளனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த சமரச கூட்டம், சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அதில் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர் வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எஸ்.செந்தில்நாதன், எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர், “பெருமாள் முருகன் தனக்கு ஏற்பட்டுள்ள நிர்பந்தங்களின் விவரங்களை முகநூலில் வேதனையுடன் எழுதியுள்ளார். பெருமாள் முருகன் இறந்துவிட்டான். அவன் மீண்டும் பிறக்க மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்’’ என தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, “எழுத்தாளர் பெருமாள் முருகனே சமரச பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டு கடிதம் கொடுத்துள்ளார். அது முடிந்துபோன பிரச்சினை. ‘மாதொருபாகன்’ நாவலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள், திருச்செங் கோட்டை சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக் கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிட முடியாது’’ என வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “பொது மக்களுக்கு மனவேதனை ஏற்பட்டிருந் தால், அவர்கள் சட்டப்படியான நிவாரணத்தை பெற முயற்சிக்க வேண்டும். ஒரு எழுத்தாளர் என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் முடிவு செய்வதை ஏற்க முடியாது’’ என்று கூறினர். மேலும், ‘‘இவ்வழக்கில் நாவலாசிரியர் பெருமாள் முருகனையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவரது நிலை குறித்து இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ள முடியும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 22-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE