2015-ல் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை 30-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று தேர்வாணைய பொறுப்புத் தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகால அட்ட வணையை வெளியிடும். இதில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளன, அதற்கான தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

கிராம நிர்வாக அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவுகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டன. நியமன உத்தரவுகளை தேர்வாணைய பொறுப்புத் தலைவர் சி.பாலசுப்ரமணியன் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

பிப்ரவரி 12-ம் தேதி வரை 2,234 கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. இதில் 234 பதவிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 200 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை 30-ம் தேதி (நாளை) வெளியிடப்படும். வேளாண்துறை துணை அலுவலருக்கான 447 பதவிகள் இந்த ஆண்டு முதல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கான தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடக்கும். இதற்கான அறிவிக்கை வெள்ளிக்கிழமை (ஜன.30) வெளியிடப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து 2 ஆண்டுகள் வேளாண் துறை சம்பந்தப்பட்ட பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேபோன்று 3 வேதியியல் நிபுணர் பணியிடங்கள் பதவிக்கு வேதியியலில் முதுகலை, வேதியி யல் தொழில்நுட்பத்தில்முதுகலை அல்லது தொழில்துறை வேதியியல் படித்திருக்க வேண்டும். குரூப்-1 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்திலும், குரூப்-2 தேர்வு முடிவுகள் இரண்டு வாரத்திலும் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் (27) என்பவர் 300க்கு 259.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். அவருக்கு தருமபுரி மாவட்டத்திலேயே பணிபுரிய நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.ரேவதி (28), காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிய நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE