வாணியம்பாடி அருகே பெரும் விபத்து தவிர்ப்பு: தண்டவாள கான்கிரீட் ஸ்லீப்பர் உடைந்து ரயில் இன்ஜின் சேதம்

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி அருகே தண்ட வாளத்தில் கான்கிரீட் ஸ்லீப்பர் உடைந்ததால் ரயில் இன்ஜின் ஆயில் டேங்க் சேதமடைந்தது. இதனால் வாணியம்பாடி அருகே 5 பயணிகள் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

வாணியம்பாடி அருகேயுள்ள சிகரனப்பள்ளி எல்.சி. 83 ஏ ரயில்வே கேட் அருகே ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிகரனப்பள்ளியில் ரயில்வே ஊழியர்கள் தண்டாளத்தில் கான்கிரீட் ஸ்லீப்பர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

இதை கவனிக்காத ரயில்வே ஊழியர்கள், ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த தூக்கிச் சென்றனர். ரயில் அருகே வருவதை உணர்ந்த ஊழியர்கள், ஸ்லீப்பர் கட்டையை தண்டவாளத்தில் வைத்துவிட்டு பாதுகாப்புக்காக ஒதுங்கி நின்றனர். இதில் ஸ்லீப்பர் கான்கிரீட் ரயில் இன்ஜின் ஆயில் டேங்க் மீது பட்டு சிதறியது. இதனால் இன்ஜின் டேங்க் சேதமடைந்து ஆயில் கசியத் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, இன்ஜின் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை 100 மீட்டர் தொலைவில் நிறுத்தினார். இதையடுத்து ஆங்காங்கே 5 பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

பின்னர் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழி யர்கள் வரவழைக்கப்பட்டு, இன்ஜின் சரிசெய்யப்பட்டது. 2 மணி நேரத்துக்குப் பிறகு அனைத்து ரயில்களும் புறப்பட்டுச் சென் றன.

இதுகுறித்து பயணிகள் கூறும் போது, ‘‘ஊழியர்களின் கவனக் குறைவே இதுபோன்ற விபத்து களுக்கு காரணம். வாணியம்பாடி அருகே நடக்க இருந்த பெரும் விபத்து ரயில் இன்ஜின் ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுக்கப்பட்டது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE