சென்னை ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் கைதான தூத்துக்குடி நீராவி முருகன் குறித்த பல்வேறு பின்னணி தகவல்கள் கிடைத்துள்ளன..
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த செந்தில் மனைவி வேலம் (37). தனியார் பள்ளி ஆசிரியையான இவர், கடந்த டிசம்பர் மாதம் 19 ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ஆசிரியை வேலத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 14 பவுன் தங்கச் சங்கிலி, செல்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவத்தை அப்பகுதியில் உள்ள மாடியில் இருந்து கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்பேசி கேமராவில் பதிவு செய்தார். வாட்ஸ்-அப் மூலம் இந்த காட்சி வேகமாக பரவியது.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட நபர் தூத்துக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நீராவி முருகன் (40) என்பதும், உடன் சென்றது அவனது கூட்டாளி அரிகிருஷ்ணன் (28) என்பதும் தெரியவந்தது. கடந்த மாதம் 26 ம் தேதி அரிகிருஷ்ணன் போலீஸில் சிக்கினார்.
தலைமறைவாக இருந்த நீராவி முருகன் ஏற்கெனவே கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப் படும் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. ஜனவரி 26-ம் தேதி இரவு நீராவி முருகனை, திருநெல்வேலி பஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி முனையில் சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். நீராவி முருகன் குறித்த பல்வேறு பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன.
80 வழக்குகள்
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி என 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏ.சி.அருணாவை கடந்த 2011-ல் கொலை செய்த வழக்கு முக்கியமானது. தனது 12 வயது முதலே குற்றச் செயல்களில் நீராவி முருகன் ஈடுபட்டு வந்துள்ளார்.
`நீராவி’
நீராவி முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர். அங்குள்ள நீராவி தெருவில் அவன் வசித்து வந்ததால் தனது பெயருடன் நீராவியை சேர்த்துக் கொண்டார். சிறு வயது முதலே குடும்பத்தை பிரிந்து, தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவில் வசித்து வந்தார்.
ரவுடியான கதை
கடந்த 1970, 1980-களில் தூத்துக்குடி யில் கள்ளச்சாராய தொழில் கொடிக் கட்டி பறந்தது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கொம்பன் மற்றும் கொப்பரை என்ற இரு கோஷ்டிகள் அவ்வப்போது மோதிக் கொள்வர். இதில் இரு தரப்பிலும் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கொப்பரை கோஷ்டியில் ஒயின்ஸ் சங்கர் என்பவர் இருந்தார். அவருக்கு நீராவி முருகன் நெருங்கிய உறவினர். அவர் மூலம் நீராவி முருகனும் கொப்பரை கோஷ்டியில் சேர்ந்தார். ஒருமுறை கயத்தாறில் வைத்து கொம்பனை கொலை செய்ய ஒயின்ஸ் சங்கர் திட்டம் தீட்டினார். இத்தகவல் தெரியவரவே ஒயின்ஸ் சங்கரை, கொம்பன் கோஷ்டியினர் தீர்த்துக் கட்டினர். அந்த இடத்தை நீராவி முருகன் நிரப்பினார். நீராவி முருகனின் ரவுடி வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது.
போலீஸாரின் தீவிர நடவடிக்கை காரணமாக கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு, ரவுடி கோஷ்டிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, நீராவி முருகன் 2002 முதல் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்றவற் றில் ஈடுபடத் தொடங்கினார்.
தமிழகம் முழுவதும் தொடர்பு
நீராவி முருகனுக்கு தமிழகம் முழு வதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வழிப்பறி கொள்ளையர் களுடன் தொடர்பு உள்ளது. பல மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்டியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த அசோக் என்ற ரவுடி கோஷ்டியில் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்தார்.
மேலும், திருப்பூரில் கொள்ளை யடிக்கப்பட்ட நகை, பணத்தை பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளி ஒருவரை கொலை செய்தார். இந்த இரு வழக்குகளும் நீராவி முருகன் மீதான முக்கிய வழக்குகள்.
குடும்பத்துடன் தொடர்பு இல்லை
நீராவி முருகன் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, `நீராவி முருகன் சிறு வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் அவரை வெறுத்துவிட்டனர். இத னால் குடும்பத்தைவிட்டு பிரிந்து ரவுடி கும்பலோடு வாழ்ந்து வந்தார்.
தமிழகம் முழுவதும் நீராவி முருகன் மீது 80 வழக்குகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 வழக்குகள் உள்ளன. பல முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவர் போல்
தூத்துக்குடியில் போலீஸ் நெருக்கடி அதிகரித்ததால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்தார். கொள்ளையடித்த நகை, பணத்தை கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்தார். கொள்ளையடித்த உடனே விதவிதமான ஆடைகள் மற்றும் செல்பேசிகளை வாங்கிக் கொள்வார். விலை உயர்ந்த ஆடைகள், ஷூக்களைத்தான் அணிவார். துணை நடிகைகளிடமும் பணத்தை அதிகம் தொலைத்துள்ளார்.
கல்லூரி மாணவர் போல் சென்னையில் வலம் வந்துள்ளார். ஒரே இடத்தில் 6 மாதங்களுக்கு மேல் தங்க மாட்டார். ஒவ்வொரு முறை நகை பறிப்புக்கு செல்வதற்கு வெவ்வேறு ஆட்களைத்தான் தன்னுடன் அழைத்துச் செல்வார்.
சுட்டு பிடிக்க திட்டம்
நீராவி முருகனின் பல புகைப்படங்கள் போலீஸாரிடம் கிடைத்ததால், தற்போது மொட்டை போட்டுக் கொண்டு நடமாடியுள்ளார். ஒரு மாதத்துக்கு மேலாக சிக்காததால், அவரை சுட்டு பிடிக்கவும் போலீஸார் திட்டமிட்டிருந்தனர். ஆனால், திருநெல்வேலி பஸ் நிலையத்தில் எளிதாக மாட்டிக் கொண்டார்’. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
மொட்டை போட்ட 2 போலீஸார்
நீராவி முருகனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் நெல்லையில் முகாமிட்டிருந்தனர். கடந்த 26-ம் தேதி இரவு சீவலப்பேரி பகுதியில் உள்ள சுடலைமாடசாமி கோயில் அருகே தனிப்படையைச் சேர்ந்த ஏட்டு விஜயகுமார், போலீஸ்காரர் புஷ்பராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது இருவரும், ‘நீராவி முருகனைப் பிடித்துவிட்டால் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டனர். அன்று இரவே நீராவி முருகன் பிடிபட்டார். இதையடுத்து அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
போலீஸாருக்கு ஆசிரியை பாராட்டு
ஆசிரியை வேலம் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
இப்படி ஒரு சம்பவம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. கொள்ளையன் வழிமறித்து மிரட்டியபோது என் உடல் நடுங்கிவிட்டது. அந்த நிமிடங்கள் எப்படி இருந்தது என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. தினமும் இந்த சம்பவம் கண் முன்னால் வந்து என்னை மிரட்டுகிறது. அந்த வழியாக பள்ளிக்கு சென்று வரும்போது கொள்ளை நடந்த இடத்தை என்னை அறியாமல் திரும்பிப் பார்க்கிறேன். இப்போது யார் எதிரே வந்தாலும் அவர்களை சந்தேகமாகவே பார்க்க வேண்டி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த போலீஸார் என்னை அவர்களின் சகோதரிபோல நடத்தினர். காவல் நிலையத்துக்கு அலைய விடக்கூடாது என்பதற்காக போனிலேயே என்னிடம் விவரங்களை கேட்டுக்கொண்டனர். கூடுதல் விவரங்கள் தேவைப்படும் நேரங்களில் என் வீட்டுக்கே வந்து விசாரித்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய அனைத்து போலீஸாருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
20 செல்போன், 70 சிம் கார்டுகள்
போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நீராவி முருகன் அடிக்கடி செல்போன்களையும், சிம் கார்டுகளையும் மாற்றியிருக்கிறார். இதுவரை 20-க்கும் மேற்பட்ட செல்போன்களையும் 70-க்கும் அதிகமான சிம் கார்டுகளையும் அவர் பயன்படுத்தியிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 நாள் காவலில் எடுக்க போலீஸ் திட்டம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீராவி முருகன் மீது 80-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நீராவி முருகன், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொள்ளையடித்த நகைகளை மீட்பதற்கான முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். முருகனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago