15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 22-ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

By செய்திப்பிரிவு

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் ஜன.22-ம் தேதி ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் அகில இந்திய அரசு ஊழியர்கள் சம்மேளன தமிழ் மாநில பொதுச் செயலர் கு.பாலசுப்ரமணியன். திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் அரசு அவுட்சோர்ஸிங் என்ற முறையை தேர்ந்தெடுத்து, தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்தப் பணியாளர்கள் என்கிற ரீதியில் பணியாளர்களை நியமனம் செய்கிறது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டி மையங்களாக மாறிவருகின்றன.

இந்நிலையில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தபோதும், அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்துள்ளது. அடிப்படை ஊதியத்துடன் 50 சதவீதம் அகவிலைப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய மாற்று ஒப்பந்த காலத்தை 5 ஆண்டுகள் என கணக்கிட்டு, 1.1.2014 முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்.

சிறப்புக் காலமுறை ஊதியம், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவோருக்கு கால முறை ஊதியம் வழங்குவதோடு, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 22-ம் தேதி தமிழக அரசின் அனைத்துத் துறை பணியாளர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE