சூடு பிடித்தது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களம்: அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மனு தாக்கல்

பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற விருக்கும் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று அதிமுக வேட்பாளர் வளர்மதி உட்பட 3 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

திருச்சி திருவானைக்கா டிரங்க் ரோட்டில் உள்ள ரங்கம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12.45-க்கு தனது வேட்பு மனுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய் தீனிடம் சமர்ப்பித்தார் அதிமுக வேட்பாளர் வளர்மதி. அவருடன் அரசு தலைமைக் கொறடாவும் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளருமான மனோகரன், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் குமார், திருச்சி புறநகர் மாவட்டச் செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரத்தினவேல், கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி ஆகியோர் உடன் வந்திருந்தனர். வேட்பு மனுவை சமர்ப்பித்த பின்னர் வளர்மதி உறுதிமொழி ஏற்றார்.

சரியாக 15 நிமிடங்களில் வேட்புமனு சமர்ப்பிக்கும் பணி நிறைவடைந்தது. வேட்பு மனு தாக்கல் நிகழ்வு குறித்து அவ்வப்போது செல்போன் மூலம் கட்சி மேலிடத்துக்கு மனோகரன் தகவல் தெரிவித்தவண்ணம் இருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த வுடன், ரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அம்மா உணவகம் அருகே அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார். அதிமுக தேர்தல் பணிக்குழுவில் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த 50 பேரும்(அனைத்து அமைச்சர் களும்) கட்சி தேர்தல் அலுவல கத்தில் காத்திருந்தனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவில்லை. தேர்தல் பணிக்குழுவில் பெயர் இடம்பெற வில்லையெனினும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஸ்ரீரங்கம் வந்து வீதி வீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தார்.

தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு அனை வரும் வாக்கு சேகரிக்கப் புறப்பட்டனர். வாகனத்தில் வேட் பாளர் வளர்மதியுடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வ நாதன், வைத்திலிங்கம், கோகுல இந்திரா, வளர்மதி, குமார் எம்.பி. அரசு தலைமைக் கொறடா மனோகரன் உள்ளிட்டோர் நின்ற படியே, அதிமுக அரசின் சாதனை களைக் கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

வேட்பாளர் அறிவிப்பில் திமுக முந்திக்கொண்டாலும், வேட்பு மனுத் தாக்கலில் அதிமுக முந்திக்கொண்டதுடன் அமைச்சர் கள் புடைசூழ உடனடியாக வாக்கு சேகரிப்பைத் தொடங் கியதால் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சுயேச்சை மனு தாக்கல்

திருச்சி சோழன் நகரில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேற்று சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து கரூர் மாவட் டம் குளித்தலையைச் சேர்ந்த எஸ்.கே.மனோகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் பெற்றுக் கொண்டார். இவரையும் சேர்த்து ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன், நேற்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய்தீனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த 27 ஆண்டுகளாக 166 முறை சட்டமன்ற, நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறுகிறார் பத்மராஜன். கடந்த 27 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட கட்டிய டெபாசிட் உட்பட ரூ.20 லட்சம் செலவளித்துள்ளதாகவும் சாதனைக்காக ஆரம்பித்த இந்த செயலை, சாதனையை எட்டிப்பிடித்த பிறகும் நிறுத்த முடியவில்லை என்கிறார்.

வரலாறு காணாத கெடுபிடி

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்காக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் அமைந்த மாநகரப் பகுதியில் 10 உதவி ஆணையர்கள், 390 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் நுழைவாயில், வஜ்ரா கலவர தடுப்பு வாகன அணிவகுப்பு என இதுவரையில்லாத கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE