கடலோர கிராமங்களில் தொடர் மணல் கொள்ளை: வைகுண்டராஜன் உட்பட 22 பேருக்கு எதிராக வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில், சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பாக வைகுண்டராஜன் உட்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களான முகிலன் குடியிருப்பு, கிண்ணிக்கண்ணன் விளை, இலந்தையடி விளையில் மோனோசைட் தாது அடங்கிய மணல் அதிகளவில் உள்ளது. இக்கிராமங்களுக்கு அருகில் உள்ள கிராமங்கள் 2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்டன. மீண்டும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டால் பாதிப்பு வராமல் தடுப்பதற்காக கடலோர கிராமங்களில் 2005-ம் ஆண்டில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சவுக்கு மரங்கள் அதிக அளவில் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த மரங்கள் வளர்ந்து, அப்பகுதி சோலையாக மாறியுள்ளது. பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.

வி.வி.மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன் உட்பட 22 பேர், முகிலன் குடியிருப்பு உள்ளிட்ட 3 கடலோர கிராமங்களை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக தாது மணலை அள்ளி வருகின்றனர். சுனாமியில் இருந்து மக்களை பாதுகாக்கும் சவுக்கு மரங்களை வெட்டுகின்றனர். பறவைகள், மயில்களையும் வேட்டையாடுகின்றனர்.

இப்பகுதியில் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்கவும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், மரங்களை வெட்டுவதை தடுக்கவும், போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு மத்திய உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், கனிமவளத்துறை செயலாளர், மாவட்ட வன அலுவலர் மற்றும் வைகுண்டராஜன் உள்ளிட்ட 22 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE