மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு நெருக்கடி: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு கல்வித்துறை நெருக்கடி கொடுப்பதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வில், கடந்த ஆண்டைக் காட்டிலும், கூடுதலாக தேர்ச்சிபெற கல்வித்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தேர்ச்சி குறைவான பள்ளிகள் பட்டியலை தயார் செய்து, அப்பள்ளிகளில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்களை கண்டறிந்து நூறு சதவீதம் தேர்ச்சி அடையச் செய்ய மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், தலைவர் கிருஷ்ணதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் பெரர் நோயல்ராஜ் ஆகியோர் கூறும்போது, ''பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சிபெற கல்வித்துறை அதிகாரிகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் நெருக்கடி கொடுக்கின்றனர். நூறு சதவீதத்துக்கு குறையும் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகின்றனர். விடுமுறை தினம், பள்ளி வேலைநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்களை பள்ளியில் அமர்த்தி படிக்கச் செய்ய வேண்டும் என ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

மாணவர்களும், ஆசிரியர்களும் தொழிற்சாலை எந்திரங்கள் இல்லை. மாணவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகம் இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நூறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும். இதற்கு ஆசிரியர் மட்டும் பொறுப்பல்ல. இவர்களில் ஒருவர் முயற்சி குறைந்தால்கூட தேர்ச்சி இலக்கை அடைவது கடினம்.

அரசின் கல்விமுறை மற்றும் சமூக மாற்றத்தால் மட்டுமே மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சிபெற முடியும். தேர்ச்சி விகிதம் குறைவதைக் காரணம் காட்டி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது இல்லை.

இதைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 4-ம் தேதி ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு கூடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாணவர்கள் வருகை, சேர்க்கை, கல்வி ஆர்வத்தை அதிகப்படுத்தவே பள்ளிகளில் கூடுதல் நேரம் படிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. தேர்வு நெருங்குவதால் பின்தங்கிய மாணவர்களை தேர்ச்சிபெற வைக்கவே இந்த நடவடிக்கை. யாரையும் அச்சுறுத்த அல்ல,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE