இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.
கருணாநிதி, தலைவர், தி.மு.க
வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். போர்க் குற்றங்களுக்காக ராஜபக்சவை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியது அப்படியே இருக்கிறது.
பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி
இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அடைந்துள்ள படுதோல்வி வரவேற்கத்தக்கது. ஆனாலும், இது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியளிப்பது ஆகாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டுக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த புதிய அதிபர் துணை நிற்க வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.
விஜயகாந்த், தலைவர், தேமுதிக
ராஜபக்ச படுதோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உலகத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை அடைந்துதான் ஆக வேண்டும். சிறிசேனா தலைமையிலான புதிய அரசு, அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்கி, தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும்.
ராமதாஸ், நிறுவனர், பாமக
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்சவை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று சிறிசேனா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள்தான் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும்.
டி.ராஜா, தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்த தேர்தலில் சிறிசேனா வெற்றிப் பெற்றார் என்பதை விட ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் முக்கியம். ராஜபக்ச தோற்கடிக்க முடியாதவர் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து விட்டது. ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்கை, குடும்ப அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர்.
புதிய அதிபர் உறுதியளித்தபடி ஜனநாயகத்தை நிலைநாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன் பிறகாவது தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உரக்க குரல் கொடுக்க வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு சிறிசேனா வெற்றிப்பெற்றது வரவேற்கத்தக்கது. இந்த வெற்றி தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் கூறியது போல, சிறிசேனா உறுதியளித்தபடி, ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கூடுதலாக்கினால், தமிழர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
ஜி.கே.வாசன், தலைவர், தமாகா (மூ)
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் தோல்வி ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழர்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் ஆட்சியாளர்கள் அனைத்து நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
கி.வீரமணி, தலைவர், தி.க.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனா, ராஜபக்சவை விட 5 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இந்த 5 சதவீத கூடுதல் வாக்குகள் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் கிடைத்தது என்பதை மனதில் கொண்டு சிறிசேனா செயல்பட வேண்டும்.
தமிழருவி மணியன், நிறுவனர், காந்திய மக்கள் கட்சி
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிசேனா, எந்தவகையிலும் ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்குவார் என்பதற்கான மிகச்சிறிய சமிஞ்கைகள் கூட இல்லை. எனவே, ராஜபக்சவின் வீழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், சிறிசேனாவின் வெற்றி ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்கித் தருமா என்பதை காலம்தான் வெளிப்படுத்த வேண்டும்.
தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இனவெறியை வைத்து அரசியல் நடத்த முனையும் எல்லோருக்கும் இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாகும். தற்போது மைத்ரிபால அதிபராக வெற்றி பெற்றிருப்பது தமிழ்மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதோ நம்பிக்கை அளிக்கக்கூடியதோ அல்ல. எனினும் முதல்கட்டமாக ஜனநாயக வழியில் ராஜபக்சவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற ஆறுதல் கிடைத்துள்ளது.
தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மாநிலத் தலைவர்
யாராக இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக கொடுங்கோல் ஆட்சி புரிந்தாலோ, ஓர் இனத்தை பழிவாங்கினாலோ அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள் என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இலங்கைத் தேர்தலில் ராஜபட்சவுக்கு கிடைத்த தோல்வியை வரவேற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago