துர்கேஸ்வரியின் குழந்தைக்கு அப்பா நான்தான்! - முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா ஒப்புதல்

இளம்பெண் துர்கேஸ்வரிக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நான்தான் என ஒப்புக்கொள்வதாக திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), சந்திரபாபு (54), சரவணன் (35) உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த 4 பேரும் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிக்மீரா, துர்கேஸ்வரி இடையில் சமரசம் ஏற்படுத்துவதற்காக இவ்வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை சமரச தீர்வு மையத்துக்கு நீதிபதி அனுப்பி வைத்தார். அங்கு இரு தரப்பினர் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு மீண்டும் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஆசிக் மீரா உள்பட 4 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஆசிக்மீரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துர்கேஸ்வரியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் மறுக்கிறார். ஆனால், துர்கேஸ்வரிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என மனுதாரர் கூறவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: துர்கேஸ்வரிக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நான் தான் என தமிழில் மனு ஒன்றை தயாரித்து ஆசிக்மீரா ஜன. 21-ல் உயர் நீதிமன்றத்தில் நேரில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது புகார்தாரரான துர்கேஸ்வரியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

ஆசிக் மீராவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மற்ற மனுதாரர் களான மைமூன்சரிபா, சந்திரபாபு, சரவணன் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மூவரும் திருச்சி 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெறலாம். மைமூன்சரிபா தேவைப் படும் போது போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சந்திரபாபு, சரவணன் ஆகியோர் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 2 வாரங்கள் தங்கி சேவையாற்ற வேண்டும். இது தொடர்பாக அருங்காட்சியக நிர்வாகி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் மூவரும் சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE