கடலூர் மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் கைதி வடிவமைத்த திருவள்ளுவர் சிலை திறப்பு

கடலூர் மத்திய சிறை வளாகத்தில் ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

கடலூர் மத்திய சிறையில், ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஆயுள் கைதியாக இருப்பவர் கலைக்கண்ணன்(31). சிலை வடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் கொண்டிருந்த இவர், 5 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்துள்ளார். கலைக்கண்ணன் உருவாக்கிய இந்தத் திருவள்ளுவர் சிலையில், தன்னுடைய ஒரு கையில் ஓலைச் சுவடியுடனும், இன்னொரு கையில் எழுத்தாணியுடனும் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் காட்சி தருகிறார்.

சிமெண்ட் கலவையைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலை கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. கலைக்கண்ணன் வடிவமைத்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, சிறைச்சாலை வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

இதுகுறித்து, கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறும்போது:

ஆயுள் தண்டனை கைதியான கலைக்கண்ணன் 2007-ம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். கலைக்கண்ணன் - ரேவதி தம்பதிக்கு இலக்கியா, குணா, சவுமியா என்ற குழந்தைகள் உள்ளனர்.கோபுரக் கலை, சிற்பத் தொழில் தெரிந்த இவர் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், டெல்லியிலும் சிற்ப வேலைகள் செய்துள்ளார்.

கலைக்கண்ணனிடம் உள்ள சிற்பக்கலை மற்றும் ஓவியக்கலை ஆகியவற்றை அறிந்து அவரது திறமைகளை வெளிக்கொண்டுவரவும், அவர் சிறை வளாகத்தில் இருந்தபடியே தன்னுடைய திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்தோம். தற்போது அவர் மிகுந்த மனத் தெளிவுடனும், உற்சாகத்துடனும் சிற்பக் கலைப் பணியை சிறையிலேயே செய்து வருகிறார் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE