ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தேர்தலையொட்டி அமைச்சர்கள், அரசியல் கட்சிகளுக்கான 91 வகை கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான 84 சின்னங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. 27-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், ஸ்ரீரங்கம் நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாக கருதப்படுகிறது. இதனால், தேர்தல் நடைமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திமுக, அதிமுக மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருந்த எஸ்.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மற்ற கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. வேட்பாளரை அறிவித்துள்ள இரு கட்சிகள் சார்பில் தேர்தல் பணிக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து 91 வகை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. நடத்தை விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
அமைச்சர் மற்றும் அரசுப் பதவிகளில் இருக்கும் அரசியல் கட்சியினர், தங்களது அரசு வாகனம், பதவி போன்றவற்றை தேர்தல் பணிகளுக்காக தவறாகப் பயன்படுத்தக்கூடாது. நடத்தை விதிகள் அமலில் உள்ள பகுதிகளில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, ஓய்வு இல்லம், தங்கும் விடுதி போன்ற அரசு தொடர்பான கட்டிடங்களை அரசியல் கட்சியினர் தவறாக பயன்படுத்தக் கூடாது.
தொகுதிக்குள் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான உரிய அனுமதிக் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் பெற வேண்டும். பிரச்சாரம் செய்யும் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே தாக்கல் செய்ய வேண்டும். அரசின் முக்கியமான பொது கொண்டாட்ட நாட்களான சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றுக்கு அரசு விளம்பரம் அளிக்கத் தடையில்லை. ஆனால், அதில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கட்சி தொடர்பான அம்சங்களோ, படங்களோ இடம் பெறக்கூடாது.
முதல்வரும் அமைச்சர்களும் தேர்தல் நடத்தை விதிகளின்படியே, தங்களது அரசு வாகனங்களை பயன்படுத்த வேண்டும். தொகுதி மக்களுக்கு சாதகமான, வாக்குகளைக் கவரக்கூடிய வகையில் அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள், விளம்பரங்கள், அமலாக்கம் போன்ற செயல்களை மேற்கொள்ளக் கூடாது. அரசியல் கட்சிகள் தங்களது வாகனங்களில் கொடிகளைப் பயன்படுத்த முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவை உட்பட 91 விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் சார்பில் 84 வகையான சுயேச்சை சின்னங்களின் பட்டியலும் அவற்றின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தொலைக்காட்சி, மெழுகுவர்த்தி, குடம், தையல் இயந்திரம், உணவுடன் கூடிய தட்டு, மரம் அறுக்கும் வாள், பீரோ, ஜன்னல், விசில், நடைக்கு உதவும் கம்பு (வாக்கிங் ஸ்டிக்), டெலிபோன், மேஜை விளக்கு உள்ளிட்ட 84 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago