மத்திய சிறைகளில் நெகிழ்ச்சியான குடியரசு விழா: திருந்தி வாழ்பவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவம் - ஏடிஜிபி திரிபாதியின் புதிய திட்டம்

By செய்திப்பிரிவு

சிறையில் இருந்து விடுதலையாகி திருந்தி வாழ்பவர்கள், சிறையில் நடந்த குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறைத் துறை உயரதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். திருந்தி வாழும் சந்தோஷத்தை சிறைக் கைதிகளுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று முன்தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கொண்டாடப்பட்ட குடியரசு விழா சற்று வித்தியாசமாக, அதே நேரம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

சிறையில் இருந்து விடுதலையாகி வந்து, சிறையில் கற்ற தொழிலைச் செய்து சம்பாதித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக வாழும் கைதிகள் 54 பேரை காவல் துறை அதிகாரிகள் தேர்வு செய்தனர். இவர்களில் 4 பேர் பெண்கள்.

இவர்கள் தண்டனை அனுபவித்த மத்திய சிறைகளில் நடந்த குடியரசு தின விழாவில் இவர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். சிறையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, விழா மேடையில் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு காவல் துறை அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

சிறையில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் மற்ற கைதிகள் முன்னிலையில் இந்த விழா நடத்தப்பட்டது. திருந்தி வாழும் சந்தோஷம் எத்தகையது என்பதை அவர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க தற்போதைய கைதிகளுடன் பகிர்ந்துகொண்டனர். ‘‘விடுதலையாகி வந்த பிறகு நாங்களும் கட்டாயம் திருந்தி வாழுவோம்’’ என்று கைதிகள் சபதம் எடுத்துக்கொண்டனர். சில கைதிகள் அப்போது கண்ணீர் விட்டுக் கதறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை புழல் சிறையில் நடந்த குடியரசு தின விழாவில், 13 ஆண்கள், 2 பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். டிஐஜிக்கள் மவுரியா, ராஜேந்திரன், சிறைக் கண்காணிப்பாளர் அன்பழகன் ஆகியோர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

திருச்சி மத்திய சிறையில் 4 ஆண்கள், 2 பெண்களுக்கு டிஐஜி துரைசாமி பொன்னாடை அணிவித்து பாராட்டினார். வேலூர் மத்திய சிறையில் டிஐஜி முகமது அனீபா தலைமையில் பாராட்டு விழா நடந்தது. கடலூர், கோவை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை மத்திய சிறைகளிலும் இந்த விழா நடந்தது. சிறைத்துறை கூடுதல் இயக்குநர் திரிபாதி உத்தரவின் பேரில் இந்த வித்தியாசமான, நெகிழ்ச்சியான விழா நடத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE