உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமங்களை இம்மாத இறுதியில் ஆன்லைன் முறையில் ஏலம் விட மத்திய நிலக்கரி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட சத்தீஸ்கர் நிலக்கரி சுரங்கம் மீண்டும் தமிழகத்துக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு தமிழக மின்வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி, ஒடிசாவின் மந்தாகினி, மகாநதி நிலக்கரி சுரங்கம் தமிழக அரசுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டது. 2006-ல் புதிதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கர் மாவட்டத்தில் உள்ள காரே பெல்மா 2-வது சுரங்கம் ஒதுக்கப்பட்டது.
இதன் நிலக்கரி இருப்பு 768 மில்லியன் டன் எனக் கண்டறியப்பட்டது. இதே சுரங்கம் மகாராஷ்டிர மாநில அரசுக்கும் ஒதுக்கப்பட்டது. நிலக்கரியை தமிழகம் 77 சதவீதம், மகாராஷ்டிரம் 23 சதவீதம் பகிர்ந்துகொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக, மத்திய அரசு உத்தரவின் பேரில் ‘மகாதமிழ் கோலியரீஸ் லிமிடெட்’ என்ற பெயரில், தமிழக - மகாராஷ்டிர அரசுகளின் கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.
கடந்த 2011-ல் அதிமுக அரசு பொறுப்பேற்றதும், இந்த சுரங்கத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து நிலக்கரியை எடுத்துவர அதிக செலவாகும் எனக் கணக்கிட்டு, சுரங்க வளாகத்திலேயே தனியாக மின் நிலையம் அமைத்து, மின்சாரமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தமிழக, மகாராஷ்டிர மாநில அரசுகள் ஆலோசித்து, லேன்கோ இன்ப்ராடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தன.
மகாதமிழ் நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்தில் 3,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் நிறுவனத்தை லேன்கோ நிறுவனம் அமைக்கும். இதில் இருந்து யூனிட்டுக்கு ரூ.1.99 விலையில் தினமும் 630 மெகாவாட் மின்சாரத்தை 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசுக்கு வழங்கும். மகாராஷ்டிர அரசுக்கு நிலக்கரியாக வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சுரங்கப் பணிகள் தொடங்க இருந்த நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்க உரிமங்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது. இதில் மகாதமிழ் கோலியரீஸ் நிறுவனத்தின் காரே பெல்மா 2-வது சுரங்க உரிமமும் ரத்தானது. இதனால், தமிழக மின் வாரியத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு முதல் குறைந்த விலையில் தினமும் 630 மெகாவாட் வரவிருந்த நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கேட்டபோது மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற வழிமுறைகளின் படி, ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமங்களை இம்மாத இறுதியில் ‘இ-ஏலம்’ (ஆன்லைன் ஏலம்) முறையில் புதிதாக ஒதுக்கீடு செய்ய மத்திய நிலக்கரி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு தமிழக மின்வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமத்தை மீண்டும் தமிழக அரசுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி சுரங்கம் மூலம் ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்தும் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் காரே பெல்மா சுரங்கம் தமிழகத்துக்கு கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரத்தான நிலக்கரி உரிமம்
காரே பெல்மா சுரங்கம் 2006-ல் ஒதுக்கப்பட்டது. தமிழக, மகாராஷ்டிர அரசுகள் கூட்டு நிறுவனம் தொடங்கி நிலக்கரி எடுத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது. 2009 வரை கூட்டு நிறுவனம் தொடங்காமல் 2 மாநில அரசுகளும் தாமதப்படுத்தின. இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு அவ்வப்போது நோட்டீஸ் அனுப்பியது. 2009 ஜூலை 15-ம் தேதிக்குள் கூட்டு நிறுவனம் தொடங்கவேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்ததால், மகாதமிழ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர், நிலக்கரி சுரங்கப் பணிகள் மேலும் 2 ஆண்டுகள் தாமதமாகி, 2011-ல் மின் நிலையத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பிறகும் மின் நிலையப் பணிகள் தாமதமான நிலையில், சுரங்க உரிமமே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago