கருணாநிதி (திமுக தலைவர்): தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான டிசம்பர் 25 அன்று மத்திய அரசின் சில அமைச்சகங்களும், மத்திய அரசுக்கு ஆதரவான சில அமைப்புகளும் தனித்தனியே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளதால், சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினரும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு நலன் கருதி இத்தகைய அணுகுமுறைகளைத் தவிர்த்திட வேண்டும், சிறுபான்மையினர் நலன்களைக் காத்திட வேண்டும் என்று இவ்வேளையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என்று இயேசு அவதரித்த இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்): தமிழகத்தில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக் கும், ஏழை எளியோருக்கும் ஆற்றிய சேவை உன்னத மானது. இந்தியாவில் மதவெறியை ஊக்குவித்து மனிதாபி மானத் தையும், மதச்சார்பற்ற தன்மையையும் சிதைக்கும் இந்துத்துவா சக்திகளின் அராஜகப் போக்கினை எதிர்கொண்டு முறியடிக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற தேமுதிகவின் கொள்கையின்படி வசதி படைத்தவர்கள், தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து, அவர்கள் உறவினர்களோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வழிசெய்ய வேண்டும்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): நம் நாட்டில் வாழ்கிற கிறிஸ்தவ மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமநிலையோடு வாழ்வதற்கு, கிறிஸ்துமஸ் விழாவை அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கிற சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர்): இயேசு பிரானின் போதனை களையும், திருக்குரானின் நெறிமுறைகளையும், திரு வள்ளுவரின் வழிகாட்டு தல்களையும் மக்கள் மறக்காமல் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும். அதுதான் மனித சமுதாயம் உயர்வதற்கான ஒரேவழி. இந்த இனிய நாளில் அந்த வழியைப் பின்பற்ற ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன், அருந்ததி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.