முறைகேடு நடந்த கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடத்திய ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், சட்ட விதிகளை மீறி அதிகாரிகள் துணையோடு புராதன சின்னங்கள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஏகத்துக்கு அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஆய்வு செய்துவரும் சகாயம் நேற்று கிரானைட் குவாரி களில் நேரில் ஆய்வு மேற் கொண்டார். திருவாதவூரில் உள்ள குவாரிகளுக்கு அவர் தனது குழுவினருடன் சென்றார். கனிம வளம், வேளாண்மை, வருவாய், பொதுப்பணி, தொல்லியல் துறை அதிகாரிகள் பலர் உடன் வந்தனர். டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் 50 போலீஸார் சகாயத்துடன் வந்தனர்.
சிதைக்கப்பட்ட புராதன சின்னம்
திருவாதவூர் மேலச்சுனைகுளம் அருகே அமைந்துள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை யான ஓவாமலை என்றழைக்கப் படும் சமணர் படுகையை அவர் பார்வையிட்டார். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தொல்லியல் ஆர்வலர் கபிலன் உட்பட பலர் பாதிப்புகள் குறித்து சகாயத்திடம் தெரிவித்தனர். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதி, படித்ததை இங்குள்ள கல்வெட்டுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மலைக்கு மேல் உள்ள சிவன் கோயிலுக்கு மாணிக்கவாசகர் வந்துசென்றுள்ளார். மலை குகையில் 10 சமணர் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் குவாரி நடத்தியவர்களால் கடுமையாக சேதமாக்கப்பட்டுவிட்டன. மலையை ஆங்காங்கே வெட்டி சிதைத்திருந்தனர். இங்கு யாரும் நுழைந்துவிடாதபடி பாதையையே அடைத்துவிட்டனர் என்றனர்.
புராதன சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்கிறது சட்டம். ஆனால் இந்த மலையில் 125 முதல் 242 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை சகாயம் பதிவு செய்தார்.
அழிக்கப்பட்ட கண்மாய்கள்
கீழச்சுனைகுளம், இரணிய ஊருணி முழுமையாக அழிக்கப் பட்டு கிரானைட் குவாரியாக காட்சி யளித்தன. கல்கட்டு ஊருணி, மாங்குளம் கண்மாய், மேலச்சுனை குளத்தின் பெரும் பகுதியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கண்மாய், கரைகளை தேடி சகாயம் அலைந்தார். அதிகாரிகளாலும் அடையாளம் காட்ட முடியவில்லை. அளந்து காட்டும்படி கூறியும் வருவாய்த் துறையினரால் முடியவில்லை. இறுதியாக சிறிய மேட்டுப்பகுதியை காட்டி இதுதான் கண்மாய் எனக்கூறியதை கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார். கண்மாய்கள் மூலம் விவசாயம் நடைபெற்ற நிலங்கள் முழுவதும் கிரானைட் கல் குவியல், 200 அடி பள்ளங்களாகக் காட்சியளித்தன.
காணாமல்போன 1000 ஏக்கர்
குவாரி அருகே பெட்ரோல் பங்க், சொகுசு அறைகளுடன் பல ஏக்கர் வளைக்கப்பட்டிருந்தது. இது யாருடைய இடம் என விசாரித்தபோது ‘கால்நடைகளுக் கான மேய்ச்சல் நிலம் அது. குவாரி அதிபர் பி.கே.செல்வராஜ் இப்பகுதியை ஆக்கிரமித்து குவாரி அலுவலகமாக பயன்படுத்திய தாகவும், தற்போது சீல் வைத்துள் ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். பின்னர் சீலை உடைத்து உள்ளே சென்று சகாயம் ஆய்வு செய்தார். இப்பகுதி யில் திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட் கற்கள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன. இதைப் பார்த்த சகாயம் இக்கிராமத்தில் மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என கேட்டார். 1800 ஏக்கர் இருப்பதாகவும், இதில் 1000 ஏக்கர் தரிசு, கண்மாய் புறம்போக்காக இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலம் எங்கே என கேட்டபோது, பெரும்பகுதி கிரானைட் குவாரி களால் ஆக்கிரமித்தும், அழிக்கப் பட்டும் விட்டன என அதிகாரிகள் கூறியதைக் கேட்டு சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு
திருவாதவூரில் பிஆர்பி, சிந்து உள்ளிட்ட 6 குவாரிகளை சகாயம் ஆய்வு செய்தார். பாசன வாய்க்கால் கரை முழுவதிலும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. யாதவர் சமுதாய மயானத்துக்கு செல்ல முடியாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் என்பவர் கண்ணீர்விட்டபடி புகார் கூறினார். இப்பகுதிலிருந்த பலநூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பலரும் புகாராக தெரிவித்தனர்.
சகாயம் ஆதரவு குழுத் தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சகாயத்துக்கு விளக்கினர். இவர்களிடம் சகாயம் கூறுகையில், குவாரிகளால் நீரா தாரம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாதிப்புகள் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து நீதிமன்றத்தில் முறையீடு
மதுரை கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுகநயினார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராம கிருஷ்ணன், மேலூர் தாசில்தார் மணிமாறன், வருவாய் ஆய்வாளர் பூமாயி, கிராம நிர்வாக அலுவலர் அனுராதா, அளவையாளர் வேல்முருகன், கிராம உதவியாளர்கள் ஆண்டி, அய்யாவு உட்பட பலர் வந்தனர். இவர்களிடம் கண்மாய், அரசு நிலம், அழிக்கப்பட்ட நிலங்களின் அளவு, அமைவிடம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சகாயம் கேட்டார். இதில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அலுவலர்கள் தயாராக வரவில்லை. கிராம கணக்குகளில் உள்ள நிலம் பற்றிய புள்ளிவிவரங்களைக்கூட முறையாக தெரிவிக்கவில்லை. கேட்டும், பார்த்தும் சொல்வதாக தெரிவித்தனர். ஆவணங்களை தேடிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு விதிமீறல் நடந்த பின்னரும் கண்மாயின் அமைவிடத் தைக்கூட காட்ட முடியாமல் அலுவ லர்கள் திணறினர்.
இதில் அதிருப்தியடைந்த சகாயம், விசாரணையில் உரிய விவரங்களை தெரிவிக்காவிடில் அதை நீதிமன்றத்தில் அப்படியே பதிவு செய்துவிடுவேன். இதற்கு உரிய அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆய்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago