கிரானைட் தொழிலுக்காக கிரா மங்கள் இருந்த சுவடே தெரியாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதை நேரில் பார்வையிட்ட சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி ஊராட்சிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
வல்லவனுக்கே வல்லவன்
காவல்துறையில் பணியாற்றும் சிலரின் வீட்டுமனைகளை பிஆர்பி நிறுவனத்தினர் மிரட்டி பெற்றுக் கொண்டதாக ஏற்கெனவே புகார் வந்திருந்ததால், அதுபற்றி விசா ரிக்க ஜாங்கிட் நகருக்குச் சென்றார். அங்கிருந்த காவலர்களின் வீடு களில், பாறைகளுக்கு வைக்கப் படும் வெடியின் அதிர்வால் விரிசல் ஏற்பட்டிருந்தது. அங்கு வீட்டுமனை வாங்கியிருந்த போலீஸார் சகாயத்திடம் கூறியது:
இங்கு 425 வீட்டுமனைகள் உள்ளன. அவற்றில் சில வீட்டு மனைகளில் காவலர்கள் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த இடத்துக்கு அருகே பிஆர்பி நிறுவனம் கிரானைட் தோண்டி எடுத்ததால், எங்களில் பலரது நிலத்தை மிரட்டி வாங்கிக்கொண்டனர்.
தர மறுத்தவர்களின் வீடு அருகே கல் குவியல்களை கொட்டி இடையூறு செய்தனர். அவர்களுக்கு பயந்து இப்போது இங்கு ஒருவர்கூட குடியிருக்கவில்லை என்றனர்.
அவர்களிடம், ‘மக்களைப் பொறுத்தவரை நீங்கள்தான் வல்லவர்கள். ஆனால் வல்லவனுக்கே வல்லவனாக சிலர் இருந்துள்ளனர்’ என கூறிய சகாயம், இதுபற்றி விரிவான அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காணாமல்போன ஓடைகள்
திருமோகூர், திண்டியூர், சிவலிங்கம், புதுத்தாமரைப்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், பாசன வாய்க்கால்கள் கிரானைட் நிறுவனங்களால் கற்களைப் போட்டு மூடப்பட்டிருந்தன. சில வாய்க்கால்கள் அடையாளமே இல்லாமல் முற்றிலும் அழிக்கப் பட்டிருந்தன. மேலும் அரசு அனு மதியின்றி சில வாய்க்கால்களில் கிரானைட் நிறுவனங்கள் பாலம் அமைத்திருந்தன. இதனால் குளங்களுக்கு நீரை கொண்டு செல்ல முடியாமலும், குளங்களில் இருக்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமலும் தவிப்பதாக பொதுமக்கள் சகாயத் திடம் புகார் தெரிவித்தனர்.
ஊரே காலியான சோகம்
சகாயம், டி.குண்டாங்கல் என்ற கிராமத்துக்கு சென்றபோது, அங்கு அனைத்து வீடுகளும் பராமரிப் பின்றி மூடிக் கிடந்தன. அதிர்ச்சி யடைந்த அவர் இதுபற்றி விசாரித் தார். அப்போது அங்கு வசித்த சிலர் சகாயத்திடம் கூறும்போது ‘31 குடும்பங்கள் வசித்து வந்தோம். அரசின் சார்பில் நீர்த் தேக்கத் தொட்டி, தொலைக்காட்சி அறை கட்டித் தரப்பட்டிருந்தது. அருகி லுள்ள கிரானைட் நிறுவனத்துக்கு வேலைக்கு வருவோர் இரவு நேரங் களில் எங்கள் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்தனர். அவர்களில் ஒருவரைப் பிடித்து கட்டி வைத்தோம். அதன்பின் ஏற் பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த கிரானைட் நிறுவனத்தினர், இங்கு யாரும் குடியிருக்கக்கூடாது என மிரட்டி, குறைந்தளவு பணத்தை கொடுத்து எங்களை வேறு ஊருக்கு அனுப்பி விட்டனர். தற்போது இருக்கவும், பிழைக்கவும் வழியின்றி தவித்து வருகிறோம் எனக்கூறி கண்ணீர்விட்டனர்.
சுவடின்றி அழிந்த கிராமம்
இதேபோல் சிவலிங்கம் கிராமம், ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வந்த 57 குடும்பங்களை கிரானைட் நிறுவனத்தினர் கட்டாயப்படுத்தி விரட்டியடித்ததாகவும், அங்கன் வாடியை இடித்துவிட்டு அந்த இடத்தில் தங்களது அலுவலகத்தை வைத்துள்ளதாகவும் பொதுமக்கள் சகாயத்திடம் தெரிவித்தனர். அவர் அங்கு சென்று பார்த்தபோது கிராமம் இருந்ததற்கான சுவடே இல்லாமல் இருந்தது. அனைத்து வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டு, சமதளமாக காணப்பட்டது. அதிர்ச்சி யடைந்த அவர் கிராமம் அழிந்து போனது பற்றியும், அரசு கட்டிடம் இடிக்கப்பட்டது பற்றியும் அரசு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள் ளதா என அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால் யாரும் சரிவர பதில் சொல்லவில்லை. எனவே ஓரிரு நாளில் முழு அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டார்.
குளங்கள், வயல்களில் கற்குவியல்
கிரானைட் கழிவுகளான கற்கள், மண் குவியலை குவாரிக்குள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங் களில் கொட்டாமல் விவசாய நிலங்கள், கண்மாய், குளங்களில் அனுமதியின்றி கொட்டி வைத் திருந்தது சகாயம் ஆய்வில் தெரிய வந்தது. இதுதவிர நிலத்தை தர மறுப்போரை கிரானைட் நிறுவனத் தினர் பல்வேறு வகைகளில் தொல்லை செய்ததாகவும், தங் களது நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதுபற்றிய விவரங்களை சகாயம் பதிவு செய்து கொண்டார்.
சீர்குலைந்த கிராமிய பொருளாதாரம்
ஆய்வின்போது கனிம வளத்துறை, வருவாய், பொதுப் பணித் துறை அதிகாரிகள் மத்தியில் ஆங்காங்கே சகாயம் பேசியது: புறம்போக்கு நிலங்களிலும், குளங்களிலும் கிரானைட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மேய்ச்சலுக்கு இடமில்லை. ஆடு, மாடுகள் அழிந்து விட்டன. மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றை நம்பியிருந்த பறவைகளில் ஒன்றைக்கூட காண முடியவில்லை. விவசாய தொழில் செய்து சுதந்திரமாக வாழ்ந்து வந்தவர்கள், இன்று சித்தாள் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கிராமங்களில் பெரும் பொருளாதார சீரழிவு நடந்துள்ளது. இதுபற்றி அரசு ஆவணங்களில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? 2 போகம் விவசாயம் செய்த பூமி வறண்டு கிடக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? அரசு நிலங்களில் கழிவுகளை கொட்டவும், பாலம் போடவும் அதிகாரம் யார் கொடுத்தது? கிரானைட் நிறுவனங்களால் அழிந்த குளங்கள், கண்மாய்கள், நீர் நிலைகள், விவசாய நிலங்களின் முழு விவரத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago