காஞ்சி, திருவள்ளூரில் கொடி நாள் விழா: ரூ.1.54 கோடி நிதி வசூலித்து காஞ்சி மாவட்டம் 2-ம் இடம்

By செய்திப்பிரிவு

கொடி நாளுக்கான பொது மக்களின் நன்கொடையாக கடந்த ஆண்டு ரூ.1.54 கோடி வசூலித்து காஞ்சிபுரம் மாவட்டம் தமிழக அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷ்னல் மேல்நிலைப் பள்ளியில் கொடிநாள் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு 2014-15ம் ஆண்டுக்கான கொடிநாள் வசூலை நிதியளித்து தொடக்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் டி.கே.எம். சின்னையா பேசியதாவது: 2013-14 கொடிநாள் வசூலில் காஞ்சிபுரம் மாவட்டம் ரூ.1.54 கோடி நிதி வசூல் செய்து மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

இந்த முறை திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த முறை காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடிக்க அலுவலர்கள் பாடுபட வேண்டும். தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த தாம்பரத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வசித்து வந்த தெருவுக்கு, எனது பரிந்துரை யின் பேரில் அவரது பெயரை தாம்பரம் நகராட்சி வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட அளவில் கொடிநாள் வசூலில் மறை

மலைநகர் நகராட்சி முதலிடத்திலும், பம்மல் நகராட்சி 2-ம் இடத்திலும் உள்ளது. இந்நகராட்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் அவர்.

திருவள்ளூரில் கொடி நாள் விழா

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக படைவீரர் கொடி நாள் விழா நடைபெற்றது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பித்த இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், திருவள்ளூர் சார் ஆட்சியர் ராகுல்நாத், திருவள்ளூர் நகராட்சி தலைவர் பாஸ்கரன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அருள்மொழி, ஓய்வு பெற்ற விங்க் கமாண்ட்டர் பார்த்தசாரதி, முப்படை வீரர் வாரிய உப தலைவர் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என, 601 பேருக்கு 81.82 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து உண்டியலில் நிதியிட்டு கொடி நாள் வசூலை அவர் தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் தெரிவித்ததாவது:

நம் தாய்நாட்டை காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் படைவீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்பட்டு நிதி திரட்டப்படுகிறது. அவ்வாறு திரட்டப்படும் நிதி முப்படை வீரர்களின் குடும்ப நலன்கள், முன்னாள் படை வீரர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 5,208 முன்னாள் படைவீரர்களும், தேசத்தின் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் மனைவிகள் 2,155 பேர் உள்ளனர். இவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. முப்படை வீரர்களின் நலன்களை காத்திட கொடி நாள் நிதிக்கு திருவள்ளூர் மாவட்ட மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE