பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பான முடிவு இன்று வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வைகோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் விலகல் அறிவிப்பை நிலைத்தகவலை பகிர்ந்துள்ளார்.

விலகல் ஏன்?

கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பான, இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், "முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது தோழமைக் கட்சிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வந்த அணுகுமுறையின் அடையாளம் எதுவும் நரேந்திர மோடி அரசில் இல்லை.

எனவே, நடந்து முடிந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த மதிமுக இனியும் பாரதிய ஜனதா கூட்டணியின் உடன்பாட்டையே, உறவையோ தொடர முடியாது என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது" என்று மதிமுக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசுடனான நெருக்கம், மீனவர் பிரச்சினையில் மெத்தனம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, காவிரியில் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவு ஆகிய விவகாரங்களில் தமிழகத்திற்கு விரோதமான முடிவுகளை எடுப்பது, தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை புறக்கணித்தது, கச்சத் தீவு விவகாரம் முடிந்துபோன பிரச்சினை என கூறியிருப்பது போன்ற பாஜக நிலைப்பாடுகளால் அக்கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

| படிக்க - கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மதிமுக உயர்நிலைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழு விவரம்->பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- மதிமுக விளக்கம் |

நீடித்த உரசல்

முன்னதாக, தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியில் கடந்த சில மாதங்களாகவே உரசல்கள் நிலவி வருகின்றன. இலங்கை தமிழர் விவகாரத்தில் பிரதமர் மோடியை வைகோ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, எச்.ராஜா போன்றோர் மதிமுகவுக்கும், வைகோவுக்கும் எதிராக வெளியிட்ட கருத்துகள் மதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் விமர்சிக்க வைத்தது.

பாஜக தலைவர்களின் பேச்சை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் என்று வைகோ கூறினார். ஆனால் அதற்கு எந்த விதமான பதிலையும் பாஜக தேசிய தலைமை வெளியிடவில்லை.

பாஜக மாநில தலைவர் தமிழிசையும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சில சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும், இலங்கை அதிபர் ராஜபக்ச திருப்பதி வரவுள்ளது போன்ற விஷயங்கள் வைகோவை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.

இன்று கூடும் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடருவதா? அல்லது வெளியேறுவதா? என்ற முடிவை வைகோ அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என மதிமுக உயர் நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE