ஒரு முட்டைக்கு 29 காசுகளை அரசு சேமிக்கிறது: முட்டை கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை - அமைச்சர் வளர்மதி பதில்

சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதலில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.

முட்டை கொள்முதல் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்மீது நடந்த விவாதம்:

2013-ம் ஆண்டில் சத்துணவு திட்டத்துக்கு முட்டை ஒன்று ரூ.3.19 காசு என்ற அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது முட்டை ஒன்றின் விலை ரூ.4.51 காசு என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

வி.சி.சந்திரகுமார் (தேமுதிக):

முட்டை கொள்முதல் முன்பெல்லாம் மாவட்டங்கள்தோறும் டெண்டர் விடப்பட்டு மாதம் ஒருமுறை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது மாநில அளவில் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் முட்டை விலை அதிகமாகிறது.

எஸ்.எஸ்.சிவசங்கரன் (திமுக):

கடந்த ஆண்டு வரை மாவட்ட அளவில் டெண்டர் விடப்பட்டு முட்டை கொள்முதல் செய்யப்பட்டது. ரூ.1.32 காசு கூடுதல் விலை சேர்த்து ரூ.4.51 காசு என்ற அளவுக்கு முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது.

கு.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

மாவட்ட அளவில் டெண்டர் விட்டு கொள்முதல் செய்தால், குழந்தைகளுக்கு தரமான முட்டை கிடைக்கும். சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்கு முட்டை கிடைக்கும்போது அதிக விலைக்கு டெண்டர் விடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் மாவட்ட அளவில் கொள்முதல் செய்ய வேண்டும்.

எஸ்.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

மாநில அளவில் டெண்டர் விடப்பட்டு முட்டை கொள்முதல் செய்வதால், மாவட்ட அளவில் உள்ள சிறிய கோழிப் பண்ணை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அஸ்லாம் பாஷா (மமக):

குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சத்துணவு திட்டத்துக்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்வது ஏன்?

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):

திமுக ஆட்சிக் காலத்தில் முன் அனுபவம் இல்லாதவர்களையும் சப்ளை செய்ய திறமையற்றவர் களையும் தேர்ந்தெடுத்தனர். மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரர்கள் முறையாக முட்டைகளை வழங்குவதற்கு முன்வரவில்லை. அவர்களே ஒதுங்கிக்கொண்டார்கள். 2006-ம் ஆண்டு வரை மாவட்ட வாரியாக முட்டை விலை மாநில அளவிலான டெண்டர் மூலமே இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் ஒப்பந்தப்புள்ளி குறித்த விளம்பரங்கள், மாதந்தோறும் வெளியிடப்பட்டதால் அதற்கான விளம்பரக் கட்டணம் அதிக அளவில் ஏற்பட்டது.

அமைச்சர் வளர்மதி:

கடந்த 17-10-2012 முதல், மாநில அளவில் ஒரே ஒப்பந்தப்புள்ளி கோரும் முறை மீண்டும் அறிமுகமானது. ஓட்டின் தன்மை, வடிவம், சுத்தம், காற்று வெற்றிடம், வெள்ளை மற்றும் மஞ்சள் கருவின் தன்மை ஆகியவற்றைக் கொண்டு முட்டைகள் தரம் பிரித்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைதான், பண்ணை வாயில் விற்பனை விலையாகும். ஒப்பந்தப் புள்ளிகளில் குறிப்பிட்டுள்ளபடி அக்மார்க் முட்டைக்கு 30 காசுகள் கூடுதலாக விலை வழங்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவே தெரிவித்துள்ளது.

ஜூன் 2014 முதல் மே 2015 முடிய ஓராண்டு முட்டையின் சராசரி விலை ரூ.4.45 முதல் ரூ.4.50 வரை இருக்கும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. அக்மார்க் முட்டைக்கு 30 காசுகள் கூடுதலாக சேர்த்து ரூ.4.80 வரை இந்த ஆண்டின் சராசரி விலை யாக வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசு ரூ.4.51-க்குதான் வாங்கியிருக்கிறது. இதனால், ஒரு முட்டைக்கு 29 காசுகளை அரசு சேமித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலிலே முட்டை வாங்கியவர்களுக்கு முட்டையைப் பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. ஊழலை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு (திமுகவுக்கு) யோக்கியதை இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE