குழந்தைகள் கொடுத்த காசுதான் 20 வருஷமா என் பசியை போக்கியிருக்கு: பள்ளிகளில் கோமாளி நாடகம் போடும் உதவிப் பேராசிரியர்

‘‘நான் ஒரு கோமாளி.. இருபது வருடங்களாக குழந்தைகள் கொடுத்த காசில் சாப்பிட்டது எனக்கு கடவுள் கொடுத்த வரம். இந்த பாக்கியம் யாருக்கும் கிடைத்துவிடாது’’ கண்கள் நனைய பேசுகிறார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் வேலு சரவணன்.

புதுவை பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார் வேலு சரவணன். மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்க வைக்கும் மனித இயந்திரங் களாக குழந்தைகளை மாற்றிவிட்ட இந்தக் காலத்தில், அவர்களிடம் இருக்கும் இறுக்கமான சூழலை தனது கோமாளி நாடகங்கள் மூலம் போக்கிக் கொண்டிருக்கிறார் இவர், சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி உள்ளிட்ட அமைப்பு கள் குழந்தைகளுக்கான சிறந்த நாடக கலைஞராக இவரை அங்கீகரித்திருக்கின்றன.

தன்னைப் பற்றி சொல்கிறார் வேலு சரவணன்… ‘இங்க படிச்சா சினிமாவுல நடிக்கலாம்.. டி.வி.யில வேலை கிடைக்கும்’ என்று சொல்லித்தான் 25 வருடங்களுக்கு முன்பு, புதுவை பல்கலைக்கழக நாடகத் துறையில் என்னை சேர்த்து முதுகலை படிக்க வைத்தனர். முதுகலை படிப்பை முடித்து, தொடக்கக் கல்வியில் நாடஹீயம் என்ற தலைப்பில் பி.ஹெச்டி.யும் முடித்தேன்.

ஆனால், வேலை அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழல். நண்பனின் தம்பியும் நானும் சேர்ந்து பள்ளிகளில் கோமாளி வேஷம் போட்டு நடிக்க ஆரம்பித்தோம். என் நாடகங்களைப் பார்த்து குழந்தைகள் சிரித்து மகிழ்ந்தனர். புதுச்சேரி கல்வித்துறை இயக்குநராக இருந்த ஜான் லூயிஸ், என் கோமாளி நாடகத்தைப் பார்த்துவிட்டு, ‘எல்லா பள்ளிகளிலும் போய் இந்த நாடகத்தை போடுறியா’ என்று கேட்டார்.

நானும் ஒப்புக்கொண்டேன். நாடகம் முடிந்ததும் கோமாளி தொப்பியில் பள்ளிக் குழந்தைகள் போட்ட காசுதான் 20 வருடங்களாக எனது பசியைப் போக்கியது. இது கடவுள் தந்த வரம். நான்கு வருடங்களுக்கு முன்பு உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தது. அதன்பிறகும் குழந்தைகளை மகிழ்விக்கும் வேலையை நான் நிறுத்தவில்லை. இன்றைக்கு பள்ளிகளில் குழந்தைகள் சிரித்தால் குற்றம், பேசினால் குற்றம் என்கிறார்கள். இதனால் குழந்தைகள் ஒரு இறுக்கமான சூழலில் பாடம் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த இறுக்கத்தை ஒரு கலைஞனால் மட்டுமே போக்க முடியும். புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்காக கோமாளி நாடகங்களை போட்டுக் கொண்டிருக்கிறோம். சந்தோஷமான மனநிலையில் பாடம் படித்தால் அதை குழந்தைகள் எளிதில் உள்வாங்கிக் கொள்வர். அத்தகைய சூழலைத்தான் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

என்னைப்போல ஒரு கோமாளி ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டும். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், குழந்தைகளுக்கான பாடங்களை நாடகங்கள், கதைகள் வடிவில் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகளை பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறோம். எனக்கான எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்த நிலை மாறி, இப்போது எதிர்காலத்துக்கான குழந்தைகளின் கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. என்றார் வேலு சரவணன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE