நீலாங்கரையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை: மருத்துவ பரிசோதனையில் தெரிந்தது

நீலாங்கரையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப் படவில்லை என்பது மருத்துவப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்துள்ள அக்கரை கடற்கரையில் கடந்த 22-ம் தேதி மாலை 6 மணி அளவில் காதலனுடன் கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு, மாணவியை பைக்கில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக சொல்லப்பட்டது.

அதன் பிறகு, இரவு 8.30 மணி அளவில் செம்மஞ்சேரி காவல் நிலையம் அருகே மாணவியை இறக்கிவிட்டு மர்ம நபர் சென்றுள்ளார். தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக நீலாங்கரை போலீஸில் மாணவி புகார் கொடுத்தார்.

இதையடுத்து நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அக்கரை சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டு இருந்த கண் காணிப்பு கேமராவில், சம்பவம் நடந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்றது பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பலாத்காரம் செய்யப்படவில்லை

இதற்கிடையில் அந்த மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக் கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பரிசோதனை முடிவில், மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் போலீஸார் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ள னர்.

அந்த மாணவியின் பெற்றோர் கூறும்போது, “பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஆனால் அவளுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. அதனால்தான், தேவையில்லாமல் பொய் சொல்கிறாள்” என்று போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீலாங்கரை உதவி கமிஷனர் சங்கர் கூறியதாவது:

மருத்துவப் பரிசோதனையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரிந்துள்ளது. மாணவியை பைக்கில் அழைத்துச் சென்ற நபரை தேடி வருகிறோம். இதுவரை இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அந்த பெண் எதற்காக, தான் பலாத்காரம் செய்யப் பட்டுவிட்டதாக தெரிவித்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கானத்தூர், முட்டுக்காடு பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:

கிழக்கு கடற்கரை சாலை அக்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடற்கரை சாலையில் கெஸ்ட் ஹவுஸ்கள், ரூம்கள் அதிக அளவில் உள்ளன. இவை வாடகைக்கு கிடைக்கும். இங்கெல்லாம் பாலியல் தொழில் நடக்கிறது. இரவு நேரங்களில் மதுவுடன் ஆபாச நடனமும் நடக்கிறது.

இரவு 10 மணிக்கு மேல் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மது குடிக்கின்றனர். போதை தலைக்கு ஏறியதும், அந்த வழியாக தனியாக வரும் பெண்கள் மற்றும் காதலனுடன் வரும் இளம் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க வேண்டும் என்றால், சாலையில் மட்டுமின்றி கடற்கரை மணல் பகுதியிலும் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். கெஸ்ட் ஹவுஸ்களில் இரவு நேர மது விருந்து, ஆபாச நடனம் போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE