ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் வந்தவர் சுட்டுக் கொலை: ஜவ்வாது மலையடிவார கிராமத்தில் பரபரப்பு

போளூர் வட்டம் சம்புகொட்டான் பாறை கிராமத்தில் வசித்தவர் ஜெயபால்(35). இவர், சந்தன மரம் மற்றும் சாராயக் கடத்தல், வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட போத்தனூர் கிராமத்தில் வசித்த பூச்சி, சின்னதாயி ஆகிய இருவரையும் பணம் மற்றும் நகைக்காக 2002-ம் ஆண்டு கொலை செய்த குற்றத்துக்காக ஜெயபால் உட்பட 6 பேருக்கு திருப்பத்தூர் விரைவு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, 6 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜெயபால், துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஜெயபால் உடல், பிரேதப் பரிசோதனைக்காக போளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வேலூர் சரக போலீஸாரால் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ஜாமீனில் வந்த ஜெயபால், அப்பகுதியில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போளூர் போலீஸார் கூறும்போது, “ஜெயபால் கொலைக்கான காரணம் தெரியவில்லை. இரட்டைக் கொலைக்கு பழிவாங்கும் செயலா? அல்லது வேறு காரணமா என விசாரிக்கிறோம். உறவினரிடம் ரூ.10 லட்சத்தை ஏமாற்றி வாங்கி, தனது பெயரில் 10 ஏக்கர் நிலத்தை ஜெயபால் கிரையம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது சட்டவிரோதத் தொழிலில் ஏற்பட்ட போட்டியா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையாளிகள் அடையாளம் காணப்படுவர்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE