மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க இயலாது: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.5200 - ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2800, தனி ஊதியம் ரூ.750 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9300-ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் ஏறக்குறைய, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையானது ஆகும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அதே ஊதிய விகிதத்தை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சி.கிப்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கிப்சனுக்கு தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நபர் குழுவிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு கூடுதலாக ரூ.750 தனி ஊதியம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்பதால் ரூ.9,300 அடிப்படைச் சம்பள கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் இடைநிலை ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் பணிபுரிகின்றனர். ஆனால், தமிழக இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில்தான் பணியாற்றுகின்றனர். கிராமங்களில் வாழ்க்கை செலவினங்கள் மிகவும் குறைவுதான்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1017-க்கும் குறைவான இடைநிலை ஆசிரியர்களே உள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129 பேர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

இத்தகைய காரணங்களினால், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இல்லை. ஊதியத்தை திருத்தியமைக்க சாத்தியமும் இல்லை. எனவே, தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்