திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன: திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடப்படவுள்ளது. அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தற்போது ஊதியத்துடன் கூடிய நீண்ட நாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்க சட்டத்தில் விதிகள் ஏதுமில்லை. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த சென்றபோது, பாக்ஸ்கான் நிறுவனம் அதில் பங்கேற்கவில்லை.

இதனால் அங்கு பணியாற்றி வரும் 1,200 பேரும் வேலையிழந்துள்ளனர். இந்த ஆட்சியில் புதிதாக தொழிற் சாலைகள் தொடங்கப்படாத போதிலும், திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடந்து வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் நிழற்குடை அமைப்பது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘போக்குவரத்து கழகத்துக்கும் தனியார் நிறுவனங் களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என்று கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் அந்த நிறுவனங்கள் தலா ரூ. 5 லட்சத்தை போக்குவரத்து கழகத்துக்கு செலுத்த வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் துறை சார்ந்த அமைச்சர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளராக இருந்த ஏமராஜ்கடந்த 30-ம் தேதி ஓய்வுபெற்றார். புதிய முதன்மை தலைமைப்பொறியாளர் நியமிக்கப்படாததால் 20 நாட்களில் 500 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடமுடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE