இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ராஜபக்ச நடத்திய இனப்படுகொலையை உலகத் தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பழைய சம்பவங்களை மறந்து விடுங்கள் என்று இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துவருகிறார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், "இலங்கை அதிபர் தேர்தலையொட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட ராஜபக்ச, கடந்த காலங்களில் நடந்ததை தமிழர்கள் மறந்துவிட வேண்டும்; இலங்கையின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இலங்கை அதிபராக இரு முறை பதவி வகித்து இப்போது மூன்றாவது முறையாக அப்பதவியை கைப்பற்றத் துடிக்கும் ராஜபக்சவின் இந்தப் பேச்சு அவரது ஆணவத்தையும், தமிழர்களை மிரட்டும் மனப்பான்மையையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்தது போன்ற மக்கள் புரட்சியை ஒருபோதும் இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அச்சுறுத்தும் தொனியில் பேசியிருக்கிறார்.

தமிழர்களுக்கு ஒருபோதும் சம அதிகாரமும், சம உரிமையும் வழங்க முடியாது என்பதை பல்வேறு தருணங்களில் தெளிவுபடுத்தியுள்ள இராஜபக்சே, இப்போது இப்படி கூறுவதன் மூலம் எந்த உரிமையும் இல்லாத அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்; ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ, உரிமைகளைக் கோரியோ போராட நினைக்காதீர்கள் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். மகிந்த இராஜபக்சேவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

துரோகங்களையும், சதிகளையும் மன்னித்து, மறப்பது தான் தமிழர்களின் குணம் ஆகும். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு ராஜபக்ச செய்த கொடுமைகள் கற்பனை செய்துபார்க்க முடியாதவை.

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்ததுடன், போரில் தப்பிய மூன்றரை லட்சம் தமிழர்களை முகாமுக்குள் அடைத்து வைத்து கண்ணியமான வாழ்க்கையை வாழ விடாமல் தடுத்தவர் தான் இந்த இராஜபக்சே. போர் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் ஆன போதிலும் தமிழர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை.

கடந்த தேர்தலில் தமிழர்களை படுகொலை செய்ததை சாதனையாக கூறி சிங்கள இன உணர்வுகளை தட்டி எழுப்பி வெற்றி பெற்ற அவர், இம்முறை தமிழர்களை நயவஞ்சக வலையில் வீழ்த்தி வெற்றி பெறத் துடிக்கிறார். இந்த வலையில் ஈழத் தமிழர்கள் வீழ மாட்டார்கள்.

அதேபோல், தமிழினத்திற்கு ராஜபக்ச செய்த இனப்படுகொலை உள்ளிட்ட கொடுமைகளை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல.... உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரையில் ஓய மாட்டார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் தமிழர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு இந்தியாவும், மற்ற நாடுகளும் உதவி செய்ய வேண்டும். தமிழீழ கோரிக்கை குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்