தேமுதிக எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்பதால் இன்றைய மாநாட்டில் விஜயகாந்த் என்ன சொல்லப் போகிறார் என்பதை டெல்லி வரைக்கும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
"தேர்தல் கூட்டணியைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். தேமுதிக-வை எந்த சூழலிலும் எந்தக் கட்சியிடமும் நான் அடகு வைக்க மாட்டேன்" - கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் தேமுதிக நடத்திய ‘மக்கள் உரிமையை மீட்கும் மாநாட்டின்’ இறுதியில் இப்படி முழங்கினார் விஜயகாந்த்.
இதனால், மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் கூட்டணி குழப்பத்துக்கு தெளிவான பதில் கிடைக்காமலேயே திடலைவிட்டுக் கலைந்தனர். அதேசமயம், அடுத்த இரண்டே மாதத்தில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு, 41 தொகுதிகளைப் போராடிப் பெற்று 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக. பிடிகொடுக்காத கேப்டன் அதேபோன்றதொரு சூழலில் இன்றைய மாநாடும் கூடுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேமுதிக-வுக்கு இந்தத் தேர்தலில் கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் கருணாநிதியும் அவரது மகன் ஸ்டாலினும் தேமுதிக-வுக்கு பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர்.
இவர்களுக்காக திருமாவளவனும் மமக நிர்வாகிகளும் விஜயகாந்தை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். வலுவான பாஜக கூட்டணியை கட்டுவதிலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழருவி மணியன் தினம் தினம் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்.
பாஜக-வின் தமிழக தலைவர்களும் டெல்லி தலைவர்களும் விஜயகாந்துக்கு தனித்தனியாக தூதுவிட்டுப் பார்த்தனர். காங்கிரஸ் ஒருபக்கம் வாசன் மூலமாக தூண்டில் வீசியது. யாரிடமும் விஜயகாந்த் சிக்கவில்லை.
கழுவும் மீனில் நழுவும் மீனாய் ஓடிக் கொண்டிருக்கிறார் மாநிலங்களவை தேர்தலிலும் மௌனம் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் விஜய்காந்தை துரத்திக் கொண்டிருந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக அல்லது காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அச்சாரத்தை போடுவார் விஜயகாந்த் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடைசிவரை மௌனம் கலைக்காமலேயே இருந்து அதையும் பொய்யாக்கினார் விஜயகாந்த். குழப்பிய பிரேமலதா விஜயகாந்த் மௌனமாக இருந்தாலும் உளுந்தூர்பேட்டை மாநாட்டை ’ஊழலுக்கு எதிரான மாநாடு’ என தேமுதிக அறிவித்திருப்பதால் திமுக, காங்கிரஸ் கட்சிகள் மாத்திரமல்ல.. சொந்தக் கட்சியினரே குழம்பிக் கிடக்கிறார்கள்.
கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்கூட ’கேப்டன் மனதில் என்ன இருக்கிறது என்று கணிக்க முடியவில்லையே’ என்கின்றனர். இதற்கிடையில், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடச் சென்ற பிரேமலதா விஜயகாந்த், அழகிரி விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக சாடியது திமுக வட்டாரத்தை திகைக்க வைத்திருக்கிறது.
விடை கொடுக்குமா மாநாடு?
இப்படி, யாருக்கும் பிடிகொடுக்காமல், யாராலும் கணிக்க முடியாமல் சாதுர்யமாக காய்நகர்த்திக் கொண்டிருக்கும் விஜயகாந்த், இன்றைய மாநாட்டில் கூட்டணி பற்றி வெளியிடவிருக்கும் அறிவிப்பு, நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரம், மாநாட்டிலும் தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் 2011 சேலம் மாநாடுபோல், "கூட்டணி அமைப்பது பற்றி நானே பார்த்துக் கொள்கிறேன்," என அவர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.