மூளைச் சாவு அடைந்த திருச்சி இளைஞர் உடல் உறுப்புகள் தானம்: ஆம்புலன்ஸில் 100 கிமீ வேகத்தில் பறந்த இதயம்

By செய்திப்பிரிவு

மூளைச் சாவு அடைந்த திருச்சி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. ஆயிரம்விளக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து அடையாறு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இதயம் 100 கிமீ வேகத்தில் கொண்டு செல்லப்பட்டது.

திருச்சியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). பெயர் மாற்றப்பட்டுள்ளது. மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவலை பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் மற்றும் கண்களை எடுத்தனர். ஒரு சிறுநீரகம், கல்லீரல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மற்றும் இதயம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக டாக்டர்கள் பொருத்தினர். மூளைச் சாவு அடைந்தவரின் கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் தேவையானவர்களுக்கு கண்களை பொருத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து இதயத்துடன் ஆம்புலன்ஸ் சுமார் 100 கிமீ வேகத்தில் சென்று அடையாறு மருத்துவமனையை 10 நிமிடத்தில் அடைந்தது. ஆம்புலன்ஸ் எளிதாக செல்வதற்கு வசதியாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்து போலீஸார் பார்த்துக் கொண் டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE