புறநகரில் வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்: தாம்பரத்தில் கண்ணாடிகள் உடைப்பு

By செய்திப்பிரிவு

சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி நேற்றுமுன்தினம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டதால், பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை காலை சென்னை புறநகர் பகுதிகளில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு ஆதரவு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கினர்.

இதுகுறித்து, ஆவடி பேருந்து நிலைய போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் காலையில் இருந்து வழக்கம் போல மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கூட்ட நெரிசல் இல்லை. மாறாக, வேலைக்குச் செல்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், பேருந்துகள் அனைத்தும் வழக்கத்திற்கு மாறாக சரியான நேரத்திற்கு இயக்கப்படுகின்றன’’ என்றார்.

பட்டாபிராம் தண்டுரையைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற பயணி கூறுகையில், நான் தினமும் பட்டாபிராமில் இருந்து அண்ணாநகருக்கு வேலைக்கு பேருந்தில் சென்று வருகிறேன். போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக, வாரத்தின் முதல் வேலை நாளான இன்று (நேற்று) என்னுடைய வேலை பாதிக்கும் என நினைத்தேன். ஆனால், பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தேன்’’ என்றார்.

தாம்பரத்தில்

தாம்பரத்தில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தால் கிழக்கு தாம்பரம், தாம்பரம், கூடுவாஞ்சேரியில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், தேனாம்பேட்டை, பிராட்வே போன்ற பல்வேறு இடங்களில் பணிப்புரியும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் தவித்தனர்.

கிழக்கு தாம்பரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை திருவான்மியூர் செல்லும் பேருந்து (T-51) மட்டும் இயங்கியது. மற்றபடி பிராட்வே செல்லும் A-51, தி.நகர் செல்லும் 5-A, B-51 உள்ளிட்ட எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் ரயில், ஆட்டோக்கள் மூலமாக அலுவலகம் சென்றனர்.

பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

தாம்பரத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை ஓட்டினர். அவர்களை சிறைப்பிடித்த மற்ற தொழிலாளர்கள், பேருந்தை ஓட்டக்கூடாது என கூறி கீழே இறக்கினர்.

இதையும் மீறி ஓட்டுநர்கள் ஓட்டிய A-21, 55, G-18, 118-R ஆகிய 4 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டது. இதனால் தாம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாம்பரம் பேருந்து நிலையத்தில், எவ்விதமான அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்