மின்கட்டண உயர்வு ஏழைகளை பாதிக்கும் இரக்கமற்ற செயல்: ராமதாஸ் கண்டனம்

மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை கடந்த 3 மாதங்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த மின்கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சுமார் ரூ.5,447 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்திய மின்வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு குறைந்தபட்சமாக 40 காசு முதல் அதிகபட்சமாக 85 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. வணிக பயன்பாடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 85 காசுகள் முதல் ஒரு ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன்வந்து இந்த கட்டண உயர்வை அறிவித்ததாகத் தான் அரசுத் தரப்பிலும், ஒழுங்குமுறை ஆணையத் தரப்பிலும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இது தமிழக அரசும், மின் வாரியமும், ஒழுங்குமுறை ஆணையமும் கூட்டாக நடத்திய மோசடி என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி உத்தேச மின்கட்டண உயர்வை அறிவித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அதனடிப்படையில் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ஆய்வு செய்து மின்கட்டண உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்ட இடங்களில் எல்லாம் மின் கட்டணத்தை உயர்த்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது தான் மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் என்றும், தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியும் அதை மின்வாரியம் கடைபிடிக்கவில்லை என்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நாகல்சாமி கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினார்.

இந்தக் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டிருந்தால் மின் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப் பட்டிருக்கக் கூடாது. ஆனால், வீடுகளுக்கான மின்கட்டணம் உத்தேசப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த அளவில் சிறு மாற்றம் கூட இல்லாமல் உயர்த்தப்பட்டிருக்கிறது. சில வகை வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் மட்டும் உத்தேசப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்ததைவிட சற்று குறைத்து உயர்த்தப் பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கருத்து கேட்பு கூட்டங்களூக்கான தேதியை முடிவு செய்வதற்காக ஒரே ஒரு கூடியதை தவிர, மின்கட்டண உயர்வு குறித்து விவாதிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஒருமுறை கூட கூடவில்லை என்றும், ஆட்சியாளர்களின் விருப்பத்தை அப்படியே உத்தரவாக ஆணையம் பிறப்பித்துவிட்டதாகவும் அதன் உறுப்பினர்களில் ஒருவரான நாகல்சாமி கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர் தீர்ப்பளித்திருக்கிறார். ஒருபுறம் தனது விருப்பப்படி கட்டண உயர்வை அறிவிக்க வைத்துவிட்டு, இன்னொரு புறம் ஒழுங்கு முறை ஆணையம் தான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறுவதன் மூலம் மக்களை ஏமாற்றுவதற்கான மிகப்பெரிய மோசடி நாடகத்தை ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது.

மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யவே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக அரசு, மின்வாரியம் ஆகியவற்றில் காணப்படும் நிர்வாகக் குளறுபடிகள், மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவை தான் மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் ஆகும்.

உதாரணமாக 17.11.2011 அன்று மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது மின்வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ. 10,000 கோடி இழப்பை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் கடன் சுமை ரூ.40,000 கோடியை தாண்டிவிட்டதாகவும் கூறப்பட்டது.

அப்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தால் வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைத்தது. மேலும் கடந்த 3.5 ஆண்டுகளில் ரூ.35,830 கோடியை மின்வாரியத்திற்கு தமது அரசு கொடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால் மின்வாரியத்தின் கடன் அடைக்கப்பட்டு லாபத்தில் இயங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இவ்வளவுக்கு பிறகும் மின்வாரியத்தின் கடன் சுமை ரூ.70,000 கோடியை எட்டியிருக்கிறது என்பதிலிருந்தே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழலும், நிர்வாக சீர்கேடுகளும் தலைவிரித்தாடுகிறது என்பதை பாமரர்களும் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 3.00&க்கு கிடைக்கும் நிலையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 15.14-க்கு வாங்குவதாலும், மின் திட்டங்களை தாமதமாக செயல்படுத்துவதாலும் மின்வாரியத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களால் ஏற்படும் இழப்பை கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் குடும்பங்களின் மின்கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், இதற்காக தமது அரசு ரூ.825.90 கோடியை மானியமாக வழங்கும் என்றும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஒட்டகத்தின் மீது டன் கணக்கில் சுமையை ஏற்றிவிட்டு கடைசியில் சில தகர டப்பாக்களை இறக்கி வைப்பதைப் போல மொத்தம் ரூ.5,447 கோடிக்கு மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு ரூ.825 கோடிக்கு மானியம் வழங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

இந்த மின்கட்டண உயர்வால் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் ஏற்கத்தக்கதல்ல. வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்து மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இதை உணர்ந்து மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி விரைவில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்