புத்தாண்டு நாளில் வைகுண்ட ஏகாதசி: பார்த்தசாரதி கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி புத்தாண்டு தினத்தில் வருவதை யொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்கழியில் வரும் வளர்பிறை யின் 11-வது நாளை வைகுண்ட ஏகாதசியாக கருதி இந்துக்கள் பெருமாள் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்துவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி 1-1-2015-ம் தேதியன்று வரவுள்ளதால் பெரு மாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பழமை வாய்ந்த பார்த்தசாரதி கோயிலில் ஆண்டு தோறும் வெகு விமர்சையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்பை பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் கூறியுள் ளதாவது:

திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கடந்த டிசம்பர் 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு பகல் பத்து உற்சவம் நடக்கின்றன. இதே போல் 1-1-2015 முதல் வரும் 11-01-2015 வரை பத்து நாட்களுக்கு இராப்பத்து உற்சவம் நடக்கவுள்ளது.

வைகுண்ட ஏகாதசி நாளான ஜனவரி 1-ம் தேதியன்று அதிகாலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி அதிகாலை 2.30 மணிக்கு மூலவர் முத்தங்கி சேவை நடக்கும். இதில் பங்கேற்க ரூ.300 செலுத்தி பேட்ஜ் வாங்கியவர்கள் மட்டுமே கோயிலின் மேற்கு வாசல் வழியே அனுமதிக்கப்படுவார்கள். 2.45 மணிக்கு உற்சவருக்கு மகா மண்டபத்தில் அலங்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

காலை 4 மணிக்கு உற்சவர் மகா மண்டபத்தில் காட்சி தருவார். இதையடுத்து மகா மண்டபத்தில் வைர அங்கி சேவையும், உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் உட்புறப்பாடும் துவங்கும். 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. மேலும் அப்போது நம்மாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்வும் நடக்கும். அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணி வரை வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தல் மற்றும் திவ்யபிரபந்தம் துவங்கப்படும்.

சரியாக அதிகாலை 5 மணி முதல் 5.10 வரை பரமபத வாசல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதிகாலை 5.10 மணியிலிருந்து 5.45 மணி வரை திருவாய்மொழி மண்டபத்தில் 3 சுற்றுகள் உற்சவர் பக்தி உலாவும், தொடர்ந்து திருவாய்மொழி மேல்மண்டபத்தில் உள்ள புண்ணியகோடி விமானத்தில் வைர அங்கியுடன் உற்சவர் எழுந்தருளல் நிகழ்வு நடக்கும்.

காலை 6 மணி யளவில் தரிசனம் செய்ய, ரூ.100 செலுத்தியவர்கள் கோபுரத் தின் பின்வாசல் வழியாகவும், கட்டணமின்றி தரிசிக்க கோபுரத் தின் முன் வாசல் வழியாகவும் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணிக்கு மேல், மேற்கு கோபுர வாயில் வழியாக பரமபத வாசலை கடந்து திருவாய் மொழி மண்டபத்தில் உள்ள உற்சவரை வழிபட்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து உற்சவர் அலங்கார திருமஞ்சனம் இரவு 10 மணிக்கும், இரவு 12 மணிக்கு நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடக்கின்றன.

ஆணையர் தகவல்

இது சம்பந்தமாக அறநிலையத் துறை ஆணையர் ப.தனபால் நிருபர்களிடம் கூறுகையில், “வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் உற்சவர் மற்றும் பரமபத தரிசனத்தை காண இரண்டு பெரிய திரைகள் வைக்கப்படும். மேலும் பக்தர்கள் வசதிக்காக கூரை அமைக்கப்படவுள்ளது. மேலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE